
நாட்டு ஓடுகள் வேய்ந்த வீடு!
நாங்கள் வாழ்ந்த பழைய வீடு!
கூட்டுக் குடும்பமாய் இருந்த வீட்டில்
கொல்லைப் புறத்தில் சிறிய முற்றம்!
சிட்டுக் குருவிகள், அணில்கள் வலம் வர
சேர்ந்து வாழ்ந்த அந்த வீட்டில்,
செந்தேள், கரையான் , சிலந்திகள் கூட
சேற்றுச் சுவர்க்குள் கொட்டமடிக்கும்!
நவாப் காலக் கட்டிடம் அது தான்;
குதிரை லாயமாம் ஒரு காலத்தில்!
சாளரக் கதவுடன் வாசற் கால்கள்
எட்டுக்கு ஐந்தடி எழுந்து இருக்கும்!
எழுத்தாளராகி நலிந்த என் தந்தை
இருக்க இடம் தந்த தொடர் வீடு!
பழுத்த நினைவாய் படங்கள், நூல்கள்
பத்திரப்படுத்திய காரை வீடு!
ஒடியும் தாளுடன் பழைய நூல்கள்
ஒரு நூலகம் போன்று நிறைந்திருக்கும்!
அலமாரி நிறைந்து அடுக்க முடியாமல்
அட்டைப் பெட்டியில் குவிந்துமிருக்கும்!
கதவு மரங்களைச் சல்லடையாக்கிய
கவிஞர் வீட்டுக் கரையான்களெல்லாம்
கவிதை, கதைகள் நூல்களை அரித்து,
கரைத்துக் குடித்து காவியம் படிக்கும்!
கொட்டும் மழையில் கூரை சரியுமோ?
ஒட்டிய ஓடுகள் உடைந்து வீழுமோ?
பட்டண வாழ்க்கைப் பரபரப்பினிலே
பயமின்றி நாங்கள் படுத்துறங்கிய சிறிய வீடு!
