பரிசு/ரூமி

தமிழில் : க மோகனரங்கன்

உனக்குத் தகுந்த
ஒரு பரிசைத் தேடிக் கொண்டு வருவதற்காக,
நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்று
உனக்குத் தெரியாது.
எதுவும் உகந்ததாகத் தோன்றவில்லை.
கனிமச் சுரங்கம் ஒன்றிற்கு தங்கத்தையும்
அல்லது
கடலுக்கு நீரையும்
சுமந்து வருவதால் என்ன பயன்?
கீழைத் தேசங்களுக்கு நறுமணத்
திரவியங்களை
ஏற்றிச் செல்வதைப் போல
ஒரு மதிப்பும் இல்லாதவையே,
உனக்காக வேண்டி
நான் எடுத்து வர எண்ணியவையும்.
என் இதயத்தையோ
அல்லது
ஆன்மாவையோ தருவதிலும் யாதொரு
பயனுமில்லை!
ஏனென்றால்
ஏற்கனவே இவை
உன்னிடம்தான் உள்ளன.
எனவே
உனக்கொரு
கண்ணாடியைக்
கொண்டு வந்துள்ளேன்.
உன்னைப் பார்த்து
என்னை நினைவுகொள்.