இனிக்கும் தமிழ் – 117/- டி வி ராதாகிருஷ்ணன்

ஆசாரக் கோவை – உடை உடுத்தல்

நம் அகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் புறத்தை சுத்தம்
செய்ய வேண்டும். புறம் அகத்தை பாதிக்கும். எனவேதான் ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத் தூய்மை பற்றி பேசுகின்றன.
உண்ணும் உணவில், உடுக்கும் உடையில் இருக்கிறது நம் கலாச்சாரம், பண்பாடு. கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பண்பாடு, கலாசாரம்.

கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பாரம்பரியம்.
நம் பண்பாட்டினை பெருமையாக நாம் செய்து கொண்டு இருக்கிறோம்.
எப்படி உடை உடுக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை சொல்கிறது.

“ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”

பாடல்

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே
முந்தையோர் கண்ட முறை.

பொருள்

உடுத்தலால் = உடை உடுக்காமல்
நீராடார் = குளிக்க மாட்டார்கள்
ஒன்றுடுத் துண்ணார் = ஒரு துணியை உடுத்தி உண்ண மாட்டார்கள். அதாவது
குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உண்பார்கள்.
உடுத்தாடை = உடுத்த ஆடையை
நீருட் பிழியார் = நீரில் பிழிய மாட்டார்கள்
விழுத்தக்கார் = பெருமை உள்ளவர்கள், பெரியவர்கள்
ஒன்றுடுத் தென்றும் = ஒற்றை ஆடையி உடுத்து என்றும்
அவைபுகா ரென்பதே = எந்த அவையிலும் நுழைய மாட்டார்கள் என்பதே
முந்தையோர் கண்ட முறை. = முன்னோர்கள் கண்ட முறை