நிழலும் நிஜமும்/தங்கேஸ்

அசையா சிறகுகள் அசைய
தென்னையின் மார்பில் முட்டுகிறது
பாக்குமரத்தின் உச்சிக் கொண்டை

கருந்தாளில் தீட்டப்பட்ட
உறைந்த சித்திரங்கள்
காட்சிகளாக உருப்பெற
அந்திக் காற்றின் உலுக்கல்களுக்கு
ஆவலோடு காத்திருக்கின்றன

வெண்சுவரில் நடந்து போகும்
ராட்சத மரக்கிளை ஒன்றிற்குள்
கணநேரம் தலைகாட்டும் முகம்
எனக்கு பரிச்சயமாக தோன்றுகிறது

பிறகு நிழல்கள் யாவுமே
எனக்கு பரிச்சயமானவைதானென்று தோன்றும்போதே

நின்று நிதானமாக என்னை
நோக்கியபடியே இருப்பது
என் நிழல் முகம்தான் என கண்டு
நான் பதற்றம் கொண்ட நொடி

அதுவும் ஒரு பெரும் திடுக்கிடலுடன்
இருளுக்குள் குதிக்க
பூமியின் மீது கவிந்து கொண்டிருக்கிறது இரவு

2 Comments on “நிழலும் நிஜமும்/தங்கேஸ்”

  1. சிறந்த கவிஞர்.பாட்டுமெட்டுத்தெரிந்தபாடலாசிரியர்.கதைஎழதிப்புகழ்பெற்ற கதாசிரியர்.ஹைவேவிஸ்உயரத்திற்கு உயர்ந்த பொருத்தமான தலைமைஆசிரியர்.அவரது நிஜமேநிழலாகவாழும்அதிசயம்தொடருகிறது.பாராட்டுகள்.விருட்சம்ஓங்கிவளரும்.

Comments are closed.