துளி 250

1972 ஆண்டு வாக்கில் கிருத்துவக் கல்லூரியில் நான் படித்த காலத்தில் ஒருமுறை பேச ஜெயகாந்தன் வந்திருந்தார். அன்று மாணவர்களைப் பார்த்து கோபமாக, ‘மாடு மேய்க்கப் போகச்’ சொன்னார். மாணவர்களும் அவரை எதிர்த்துப் பேசினார்கள். சமாதானம் செய்யவே முடியாது போலிருந்தது. ரொம்பவும் துணிச்சல் காரர். அந்தச் சமயத்தில் அவர் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. ஒருமுறை பரங்கிமலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் பேச வந்திருந்தார். அவர் பேசுவதைக் கேட்க நானும் சென்றிருந்தேன். அன்று அவர் வைத்திருந்த துண்டை தலையில் முண்டாசு மாதிரி (பாரதியார் ஸ்டைலில்) கட்டி இருந்தார். பின் கூட்டம் ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகிகளையே தாக்கிப் பேச ஆரம்பித்தார். அதைக் கேட்க வந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த மாதிரி கால கட்டத்தில் அப்படிப் பேசுவது அவர் இயல்பு என்று எனக்குப் பின்னால் பட்டது. அவர் பேச்சைக் கேட்ட எனக்கும், அவர் மாதிரி பேச வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அதே மாதிரி நானும் மாம்பலத்தில் நாங்கள் ஏற்பாடு செய்த இலக்கியக் கூட்டத்தில் சத்தமாகக் கத்திப் பேசி கேட்க வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினேன். உண்மையில் என் இயல்புக்கு அதுமாதிரி பேசுவது ஒத்து வராததால், அப்படிப் பேசுவதையே விட்டுவிட்டேன். அதேபோல் ஜெயகாந்தன் பேசுவதையும் கேட்கப் போவதை நிறுத்திக் கொண்டேன். ஏகப்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எழுதிக் குவித்த ஜெயகாந்தன் எழுதுவதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டார். ஆனால் எழுத்தாளர்களில் அவருக்குக் கிடைத்த மரியாதை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. எழுதியே சம்பாதித்தவர். ஞானபீட பரிசிலிருந்து எல்லாப் பரிசுகளும் அவரைத் தேடி வந்தன. எனக்குத் தெரிந்து அவர் எழுத்து கூட பல எழுத்தாளர்களைப் பாதித்திருக்கிறது.
அவர் கதைகளை திரைப்படங்களாகவும் எடுத்திருந்தார்கள். அவரே சினிமாப் படம் தயாரித்திருக்கிறார். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தை ரசித்திருக்கிறேன். நானும் என் சகோதரரும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படத்தைப் பார்த்துவிட்டு பாதியிலே எழுந்து வந்திருக்கிறோம். நடிகை லட்சுமி அப்படத்தில் புகையிலையைத் துப்பித் துப்பியே நம் மீதும் துப்பி விடுவாரோ என்ற பயம் வந்துவிடும். இந்த நாளில் அவரை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
