கம்பன் கவியமுதம்—42/வளவ. துரையன்

                          மகளிரிடம் தோற்பன

இயல்புடை பெயர்வன மயில்மணி இழையின்
வெயில் புடைபெயர்வன மிளிர்முலை குழலின்
புயல்புடை பெயர்வன பொழிலவர் விழியின்
கயல் புடைபெயர்வன கடிகமழ் கழனி [74]

[இயல்=சாயல்; புயல்=மேகம்; கயல்=மீன்]

அந்நாட்டு மகளிரின் சாயலுக்குத் தோற்று ஓடுவன மயில்களாகும். அம்மகளிரின் முலைகளிலே விளங்கும் இரத்தினங்கள் பதிந்த அணிகலன்களுக்குத் தோற்று ஓடுவன வெயிலின் கதிர்களாகும். ஏனெனில் அந்த அணிகலன்கள் வெயிலைக் காட்டிலும் மின்னக் கூடியவையாம்; மகளிரின் கூந்தலுக்குத் தோற்று ஓடுவன சோலையில் உள்ள மேகங்களாம். ஏனெனில் கார் மேகங்களைவிட அம்மகளிரின் கூந்தல் கருமையாக உள்ளதாம். அப்பெண்களின் கண்களுக்குத் தோற்று ஓடுவன வயல்களில் உள்ள மீன்களாம்.
இப்பாடலில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளான் கம்பன். அதாவது முதலில் உபமேயங்களைக் கூறிப் பின்னர் உவமைகளைக் கூறுகிறான், மயிலின் சாயல், வெயில், மேகம், மீன் ஆகிய உபமேயங்களைக் கூறிப் பின் அவற்றுக்கு உவமையாக மகளிர், முலைகளின் அணிகலன்கள், கூந்தல், கண்கள் எனக் கூறுகிறான். இப்படிக் கூறுவதை எதிர்நிலை அணி என்பர்.