மனமற்ற செம்பருத்தி/தங்கேஸ்

அடுத்த தெருவிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும்
தொலைந்து போன நதி
சங்குப்பூனையின் பரவசமாய்
கால்களைச்சுற்றி சுற்றி வருகிறது
நம்மை மோப்பம் பிடித்து

அள்ளிப்பருக நினைக்கையில்
மேகத்தை சபித்தபடி ஊர்ந்து போகும்
கிழவனின் உதடுகளில்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
வனாந்தரத்தின் வாசம்

எலிக்குஞ்சுகளாக தொலைக்காட்சியை
மொய்த்துக் கிடக்கும் கண்களில்
ஆதி வேட்டை வெறி அடங்கவேயில்லை

பூனையின் கண்களாய் மினு மினுத்துக்கிடக்கும்
சிறுவர்கள்
விளம்பர இடைவெளிகளில்
ரிமோட்டை கைப்பற்றி
பீம் டாம் சகிதம் வலம் வருகிறார்கள்

ஈரத்தை சுமந்தபடி புறப்பட்டு வரும்
சாயங்காலக் காற்றுக்கு
திறந்த படி காத்திருக்கின்றன
மனித உடலங்கள்

மொட்டைமாடியெங்கும்
காயப்போட்ட கொடிகளில் பட படத்து
அடித்துக்கொள்ளும் மெய் இரகசியங்கள்

திருகப்பட்ட கழுத்துக்களோடு
காற்றிலலையும் காகங்கள்
இரவின் கீற்றாய் தரையிறங்கி வருகின்றன
ஒரு துளியையும் குடித்து விட இயலாத
விரக்தியில்

சூட்டப்படும் மாங்கல்யமாய் பறந்து வந்த
வெண்புறாக்கள்
சட்டென்று கலைகின்றன
இரவு உருவாகும் புள்ளியில்

மனமற்று ஆடும்
வாசல் செம்பருத்தியில் என்
வாசம் ஒரு கண தான் என்றாலும்
போதும் இது
எத்தனையோ தூக்கமற்ற
இரவுகளை கரைத்து விடுவதற்கு