பெற்றோர்களின் அட்ராசிட்டிகள்/ஆர்.அபிலாஷ்

ஒரு செய்தியைப் படித்தேன். தமிழகத்தின் சிறுநகரம் ஒன்றை சேர்ந்த இரு இளம்பெண்கள். தன்பால் விழைவாளர்கள். கல்லூரியில் ஒருவர் நர்ஸிங் படிக்க மற்றொருவர் ஆங்கில இலக்கியம் இளங்கலை முதலாமாண்டு படிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ முடிவெடுத்து சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். பெற்றோர்கள் போலீஸில் வழக்கு கொடுத்து இப்பெண்களை பிடித்து கொண்டு போய் விடுகிறார்கள். “போலிசார் இப்பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்” என சன் நியுசில் சொன்னார்கள். அப்படி அறிவுரை சொல்லும்படி என்ன குற்றம் பண்ணினார்கள்? காதலிப்பது குற்றமா? லெஸ்பியனாக இருப்பது குற்றமா? இந்த பாலின அரசியல் புரிதலற்ற போலிசாரை திருத்த முடியாது. அதை விடுங்கள். உண்மையான பிரச்சனை இனிமேல் தான் ஆரம்பிக்க இருக்கிறது. அடுத்தடுத்து இப்பெண்களின் பெற்றோர்கள் என்ன செய்வார்கள் என சொல்லி விடுகிறேன். ஏனென்றால் இதைப் போல நிறைய கேஸ்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்:

இப்பெண்களை அவரவர் குடும்பங்களில் இருந்து சில போலி உளவியலாளர்கள், மருத்துவர்களிடம் அழைத்துப் போவார்கள். எதற்கு? தன்பால் விழைவு தப்பு என மூளைச்சலவை செய்ய. அது எடுபடாது. அதானால் அடுத்து இவர்களுடைய உடம்பில் எஸ்டிரஜன் ஹார்மோனை அதிகமாக்க மருந்துகளை ஏற்றுவார்கள். இந்த சிகிச்சைக்கென கணிசமான ஒரு தொகையை இம்மருத்துவர்கள் வசூலிப்பார்கள் (இப்படி ஒருவர் முன்பு ஜு.வியில் பத்தி ஒன்றைக் கூட எழுதிக் கொண்டிருந்தார்.) இந்த சிகிச்சையும் பலன் தராது.
இந்த பெண்கள் தம் பெற்றோரை ஒருவழியாக ஏமாற்றி பட்டப்படிப்பை முடிப்பார்கள். ஒன்று அவர்களுடைய பழைய காதல் முறியும், புது காதல்கள் பிறக்கும், அல்லது பழைய காதலையே தொடர்வார்கள். படிப்பு முடிந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கு வரன் பார்க்க ஆரம்பிப்பார்கள். உடனே கல்யாணம் பண்ணிக்கோ என நச்சரிப்பார்கள். இப்பெண்களுக்கும் பெற்றோருக்கும் மோதல் வெடிக்கும். “நாங்க கேட்கிறது படி கல்யாணம் பண்ணிக்கோ, அதன் பிறகு என்ன எழவுன்னாலும் பண்ணித்தொலை” என்பார்கள். ஒரு மறைமுக ஒப்பந்தம். அதைத் தொடர்ந்து திருமணம் நடக்கும்.
தான் மணப்பது ஒரு தன்பால் விழைவாளரை என்று உணராமலே ஒரு மரமண்டை இவர்களை கல்யாணம் பண்ணிக்கும். அடுத்து தாம்பத்ய வாழ்வில் பல பிரச்சனைகள் வெடிக்கும்.
சொல்லி வைத்தது போல ஆறு மாதத்தில்லோ ஒரு வருட முடிவிலோ அந்த பெண் மூட்டை முடிச்சை தூக்கிக் கொண்டு தன் பெற்றோரின் வீட்டுக்கு வந்து விடுவார். முதலில் போலீஸ், மருத்துவர்கள் என தய்யத்தக்கா என குதித்த பெற்றோர் இப்போது அமைதியாக / கமுக்கமாக தம் மகளின் முடிவை ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தேவை சமூகத்தின் வாயை மூட ஒரு கல்யாணம் பண்ணி வைப்பது. தம் மகளிடம் ‘குற்றமில்லை’ என்று ஊருக்கு காட்டுவது. இதனால் அப்பாவி ஆண் ஒருவனின் வாழ்க்கை நாசமாவதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
அடுத்தது, பெற்றோர் தம் பெண்ணுக்காக விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவார்கள். அதில் கணவன் அவளை கொடுமை செய்தான், தாம்பத்ய சுகம் அளிக்கவில்லை, உளநெருக்கடி கொடுத்தான் என குற்றச்சாட்டுகளை அடுக்குவார்கள். அவர்கள் தரப்பில் சுமூகமான விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வருடக்கணக்கில் இப்பிரச்சனை ஓடும். பெரும்பாலும் சீக்கிரமாகவே முடித்து விடுவார்கள்.
இப்பெண்கள் இப்போது ‘விடுதலை’ பெறுவார்கள் – வேலை ஒன்றை தேடிக் கொண்டு சுதந்திரமாக இருப்பார்கள். தம் காதலியுடன் சேர்ந்து வாழ்வார்கள். பெற்றோர் இதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் இவர்கள் இடையே மாட்டி சில ஆண்கள் வாழ்வை இழப்பார்கள். எப்படி இருக்கிறது இவர்களுடைய அறம்?
இது போல தன்பால் விழைவாளரான ஆண்களை வற்புறுத்தி மணமுடித்து வைக்கும் பெற்றோரும் உண்டு. அதனால் பெண்களின் வாழ்க்கை இன்னொரு பக்கம் நாசமாகிறது.

இதற்கு தீர்வு ஊடகங்களில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி பிரச்சாரம் மேற்கொள்ளுவது, பெற்றோரைத் திருத்துவது, குழந்தைகளை வற்புறுத்தி மணமுடித்து வைக்கும் பெற்றோருக்கு ஐந்து வருடங்களாவது சிறைத்தண்டனை கொடுப்பது. இந்த போலி மருத்துவர்களுக்கு கடுமையான தண்டனை அளித்து அவர்களுடைய சான்றிதழ்களை பறிப்பது.

என்னவொரு காட்டுமிராண்டி சமூகம் இது!