தமிழ் சூழலில் சுயசரிதம்/முஜிபுர் ரஹ்மான் 

தமிழ் சூழலில் சுயசரிதம் என்கிற தன்வரலாறு அதிகமாக வெளியாகவில்லை.ஆனால் தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் தன்வரலாறுகள் வாசகர்களால் வரவேற்கப்படுகின்றன.பதினொன்றாம் நூற்றாண்டின் அப்துல்லா இபின் புலூச்சி என்ற மன்னர் உலகின் முதல் தன்வரலாற்றை எழுதியவராவார்.போராளி தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூலை படிக்கிறபோது தன்வரலாற்று நூல்களின் தேவையை அறியமுடிகிறது.இரட்டைமலை சீனிவாசனின் தன்வரலாறு,ஆமென் என்ற கன்னியாஸ்திரியின் தன்வரலாறு போன்றவை அபூர்வமாந அனுபவத்தை தருபவை.மேலும் புனைவியல் தன்வரலாறு என்ற ஜெனர் தமிழில் இல்லை.ஆனால் நாவலாக அந்த ஜெனர் வருகிறது.செர்பிய நாவலாசிரியர் மிலொராட் பாவிச் எழுதிய தன்வரலாறு உலகப்புகழ்

பெற்றதாகும்.சுயசரிதை – மிலொராட் பாவிச்**********

நான் கடந்த இருநூறு ஆண்டுகளாக எழுத்தாளனாக இருக்கிறேன். வெகு காலத்திற்கு முன்பு, 1766ல் புடிம் நகரில் வாழ்ந்த ஒரு பாவிச் தனது கவிதை தொகுப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து எங்களை எழுத்தாளக் குடும்பமானவே நினைத்துவந்திருக்கிறோம்.நான் 1929ல் சொர்கத்தின் நான்கு நதிகளுள் ஒன்றின் கரையினில் பிறந்தேன். நான் பிறந்தது துலாம் ராசியில் (அல்லது ஆஸ்டெக் ஜாதகப்படி பாம்பு ராசியில்).முதன்முறை என் மேல் குண்டுகள் பொழிந்த போது எனக்கு வயது பன்னிரெண்டு. இரண்டாம் முறை நிகழும் போது எனக்கு பதினைந்து வயது. இவ்விரண்டு பொழிவுகளுக்கு இடையே முதல் முறையாக காதலில் விழுந்ததும், ஜெர்மானிய ஆட்சியில் கட்டாயத்தினால் ஜெர்மன் மொழி பயின்றதும் நிகழ்ந்தது. வாசமான புகையிலையை புகைத்த ஒருவரிடம் ரகசியமாக ஆங்கிலமும் கற்றேன். இதற்கிடையில் முதல் முறையாக ப்ரென்ச் மொழியை மறந்தேன் (பின்னாட்களில் மேலும் இரு முறை மறந்தேன்).இறுதியாக, அமெரிக்க-பிரித்தானிய படைகளின் குண்டுபொழிவிலிருந்து தப்பிக்க ஒரு முகாமில் தங்கிய போது, ருஷ்ய அதிகாரி ஒருவர், அவரிடம் இருந்த ருஷ்ய நூல்களை (ஃபெட் மற்றும் ட்யுட்ஷெவ்வின் கவிதை தொகுப்புகள்) கொண்டு எனக்கு ருஷ்ய மொழியை கற்பித்தார். மொழிகளை கற்பது என்பது வசீகரிக்கும் மிருகங்களாக உருமாறும் அனுபவம் என்று இன்றெனக்கு தோன்றுகிறது.இரண்டு ஜான்களின் மீது அன்பு கொண்டிருக்கிறேன் – தமாஸ்கஸின் ஜான் (2) மற்றும் ஜான் க்ரைசோஸ்டம் (3) (தங்க நாவினன்).என் வாழ்வினை காட்டிலும் எனது புத்தகங்களில் வரும் காதல்களில் அதிக வெற்றி கண்டிருக்கிறேன். இதில் ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு, இன்றும் தொடர்கிறது அது. நான் உறங்குகையில் இரவு இனிமையாக என் கன்னத்தை பிடித்துக்கொண்டிருக்கிறது.1984 வரை, நான் தான் நாட்டிலேயே மிக குறைவாக படிக்கப்பட்ட எழுத்தாளன். அதன் பிறகு மிக அதிகமாக படிக்கப்பட்ட எழுத்தாளனானேன். (4)நான் ஒரு நாவலை அகராதியின் வடிவில் எழுதினேன். இரண்டாம் நாவல் குறுக்கெழுத்து வடிவிலானது. மூன்றாம் நாவல் நீர்கடிகார வடிவம் (5). நான்காம் நாவல் டாரட் சீட்டுகளின் வடிவில். எனது நாவல்களுக்கு நான் அதிக தொந்தரவு தரக்கூடாதென நினைக்கின்றேன். நாவல் ஒரு வகை வைரஸ் கிருமி போன்றது என்பது என் நம்பிக்கை – அது தானாகவே பரவிப் பரவி வளர்கிறது.ஆச்சரியகரமாக, எனது நூல்கள் 73 முறை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால், என்னிடம் சுயசரிதை எதுவும் இல்லை. உள்ளதெல்லாம் நூற்பட்டியல் தான்.பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டு விமர்சகர்கள் என்னை 21ஆம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளன் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் “குற்றமல்ல, குற்றமின்மையே நிரூபிக்கப்படவேண்டியதாக” கருதப்பட்ட 20ஆம் நூற்றாண்டில் தான் நான் வாழ்ந்தேன்.என் கனவுகளில் இறந்தவர்களை தீண்டிய அதே கரம் கொண்டு உயிரோடிருப்பவர்களை தீண்டக்கூடாது என்பதை அறிந்திருந்தேன்.என் வாழ்வின் ஆகப்பெரிய ஏமாற்றங்கள் எனது வெற்றிகளிலிருந்தே முளைத்தன. வெற்றி எதையும் தருவதில்லை.நான் யாரையும் கொன்றதில்லை. ஆனால் அவர்கள் என்னை கொன்றுவிட்டனர், நாம் இறப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே. எனது புத்தகங்களின் ஆசிரியன் ஒரு துருக்கியனாகவோ ஜெர்மானியனாகவோ இருந்திருந்தால் அவற்றிற்கு நல்லதாக இருந்திருக்கும். மோசமாக வெறுக்கப்பட்ட ஒரு தேசத்தின் – செர்பிய தேசத்தின் – ஆகப்புகழ்பெற்ற எழுத்தாளனாக அறியப்பெற்றேன்.21ஆம் நூற்றாண்டு எனக்கு 1999ல் ஆரம்பித்தது. நாட்டோ (NATO) படைகள் பெல்கிரேடின் மீதும் செர்பியாவின் மீதும் குண்டு வீசத்துவங்கிய போது. அன்றிலிருந்து எதன் கரையில் பிறந்தேனோ, அந்த டான்யூப் நதி பயணம் செய்ய ஏதுவற்றதாகப் போய்விட்டது.எழுத்தின் அலாதியான இன்பத்தை அளித்ததன் மூலம் கடவுள் எனக்கு அளக்கவியலா நன்மையினை செய்தார் என்றெண்ணுகிறேன். அந்த இன்பத்தை கொண்டே என்னை தண்டித்தும் விட்டார் என்றும் தோன்றுகிறது.