வண்ணதாசன் கவிதை

கோடை தான்.
வெயில் இல்லை, மழை.
நீங்கள் பாடுங்கள்.
நான் கேட்கிறேன்.
*
உள்ளே வரச் சொல்கிறீர்கள்.
உங்கள் கதவுகளை இன்னும் நீங்கள்
திறக்கவே இல்லை.
*
நஞ்சு எனில்
நஞ்சாகவே கொடுங்கள்.
நீரில், மோரில் வேண்டாம்.
ஒன்றுடன் ஒன்று கலப்பின்
ஒவ்வாமை எனக்கு.
*
தண்டவாளங்களைத்
தாண்டித் தாண்டி
விளையாடத் தெரிகிறது
ஆட்டுக் குட்டிகளுக்கு.
*
அழகாக இருக்கிறார்
காரின் மேல் உதிர்ந்த
நந்தியாவட்டைப் பூக்களைக்
கையில் எடுத்துப் பார்க்கும்
வாடகை ஓட்டுநர்.
*
எல்லோருக்கும் பின்னால்,
எனக்கு முன்னால்
பிரகாரத்தில் செல்லும்
பெண் எனக்கு அம்பிகை
*
பரமன் போய்விட்டான்.
எப்போதாவது நினைக்கிறேன்.
பரமனை நினைத்தால்
பரமன் ஞாபகம் மட்டுமே
வருகிறது இப்போதெல்லாம்.
*
அப்பா, அம்மா படத்தைப்
பெரிதாக்கி இருக்கிறேன்.
பெரிதாகவே இருக்கிறார்கள்
அப்பாவும் அம்மாவும்.
*
2015

One Comment on “வண்ணதாசன் கவிதை”

Comments are closed.