ஜெயமோகன் கட்டுரை

“இங்கு சினிமாவில் நான் எதையுமே சாதிக்க வரவில்லை. நான் ஆரம்பத்தில் BSNL அலுவலகத்தில் வேலை பார்த்தேன். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் ஒரு மாதத்திற்கு நான் 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் BSNL இல் நான் வாங்கிய ஊதியத்தைவிட நூறு மடங்கு பெரிய ஊதியம் சினிமாவில் கிடைக்கும். இப்போது உலகம் முழுவதும் பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளேன். நிறைய இலக்கிய அமைப்புகள் அமைத்துள்ளேன். இந்த விஷயங்களை செய்வதற்கு சினிமாதான் எனக்குப் பொருளாதார ரீதியாக உதவியாக உள்ளது. சினிமா இல்லையென்றால் இன்று விஷ்ணுபுரம் அமைப்பு இருந்திருக்காது. சினிமா இல்லையென்றால் இன்று என்னால் ‘வெண்முரசு’ எழுதியிருக்கமுடியாது. இதுதவிர சினிமாவில் நான் பெரும்பாலுமான நேரம் இயக்குநர்களுடன் தான் பணியாற்றுவேன். எல்லா இயக்குநர்களுக்கும் ஒரு காலகட்டத்தில் எழுத்தாளனாக வேண்டிய ஆசை இருந்திருக்கும். அதனால் மற்ற எழுத்தாளர்கள்மீது அவர்கள் காட்டும் அணுகுமுறை மிகவும் மரியாதை கலந்ததாகதான் இருக்கும். ஆகவே எனக்கு ஒரு மரியாதையான உற்சாகமான வேலை சூழல் சினிமாவில் கிடைக்கிறது. அந்த வேலை சூழல் எனக்கு BSNL-ல் பணியாற்றும்போது இருந்தது கிடையாது.

ஒரு படைப்பிற்காக ஆய்வு செய்வது என்பது மிகவும் கடினம். அதிலேயே வாழ்வதுதான் அதற்கான வழி. உதாரணத்திற்கு என்னுடைய ‘கொற்றவை’ நாவலையே எடுத்துக்கொள்ளலாம். சிலப்பதிகாரத்தை நான் முதலில் படிப்பது பள்ளிக் காலத்தில். நான் அதை முறையாக கவிராயர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். அதன் பிறகு குறைந்தது 15 முறையாவது சிலப்பதிகாரத்தைப் படித்திருப்பேன். பின்பு நீண்ட காலத்திற்குப் பிறகு, கேரளத்தில் `நல்லமதோற்றம்’ எனும் நாட்டுபுறப் பாடலைப் பார்க்கிறேன். அது சிலப்பதிகாரத்தினுடைய நாட்டுப்புற வடிவம். அதன்பின்பு தான் எனக்குப் புரிந்தது சிலப்பதிகாரம் இலக்கியத்திற்கு முன்னரே அதனுடைய நாட்டுபுற வடிவம் வந்தது என்று. அதைத் தழுவித்தான் இலக்கியம் உருவானது. இதிலிருந்து எனக்கு ஒரு நாவல் எழுத வேண்டுமென்று உத்வேகம் பிறக்கிறது. 1983-ல் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ள ஆரம்பித்தேன். 2003-ல் தான் நாவல் எழுத ஆரம்பிக்கிறேன். அந்த இடைப்பட்ட 20 வருடத்தில் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, தொடர்ந்து விவாதித்துக்கொண்டே இருந்தேன். கோவை ஞானியிடம்கூட இதுகுறித்து நிறைய விவாதித்திருக்கிறேன். ‘வெண்முரசு’ நாவலுக்காக இருபத்தைந்து இடங்களுக்கு மேல் பயணித்திருக்கிறேன். இமயமலை அடிவாரத்திலிருந்து, மகாபாரதம் நடந்ததாய்ச் சொல்லப்படுகிற இடங்கள் அனைத்திற்கும் சென்றிருக்கிறேன். இப்போதுகூட ‘தென்திசைப் பயணம்’ எனும் தலைப்பில் சுடலைமாடன் பயணங்கள் குறித்து நாவல் எழுதலாம் என்று ஆய்வு செய்துக்கொண்டிருக்கிறேன். இதை நான் எழுதலாம், எழுதாமலே போகலாம். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆய்வு என்பது தினம் தினம் நடக்க வேண்டும்”

நன்றி: விகடன்

One Comment on “ஜெயமோகன் கட்டுரை”

Comments are closed.