
மகாசுவாமிகளுக்குத் தமிழில் அளவற்ற ஆர்வம் இருந்தது. அவ்வையாரின் பாடல்களை அவர் பெரிதும் மதித்தார். ஆண்டாளின் திருப்பாவையைப் போற்றிப் புகழ்ந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் திருப்பாவையின் பெருமைகளையும் அவ்வையாரின் மகிமைகளையும் எடுத்துச் சொல்லிவந்தார்.
தமிழில் நாட்டம் கொண்டிருந்த மகாசுவாமிகள் தமிழ் அறிஞர்களிடமும் அன்பு கொண்டிருந்தார். தமிழறிஞர்கள் அவரைத் தேடி வருவதும் உரையாடி மகிழ்வதும் அடிக்கடி நடைபெறும் சம்பவங்கள். தமிழறிஞர்களிடம் பல இலக்கியச் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வது மகாசுவாமிகளின் பழக்கம்.
மகாசுவாமிகள் 1932ஆம் ஆண்டு சென்னைக்கு விஜயம் செய்த போது சுவாமிகளுக்குப் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அன்று வரவேற்புப் பத்திரத்தை எழுதி வாசித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் மாணவரும் கலைமகள் மாத இதழ் ஆசிரியருமான கி.வா. ஜகந்நாதன்.
அன்றுமுதல் கி.வா.ஜ. மகாசுவாமிகளின் அடியவரானார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகாசுவாமிகளை தரிசித்தும் உரையாடியும் பயனடந்தார்.
சென்னை மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் மகாசுவாமிகள் செய்த சொற்பொழிவுகளை உடனுக்குடன் ஒரு சொல் விடாது எழுத்து வடிவில் எழுதியவர் கி.வா.ஜ. தான்.
அந்தச் சொற்பொழிவுகள் பின்னர் ஆச்சார்ய உபன்யாசங்கள் என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாகக் கலைமகள் வெளியீடாக வந்தன.
கி.வா.ஜ.வின் தமிழ்ப் புலமையை சுவாமிகள் பெரிதும் மதித்தார். அவரிடம் பல பழைய இலக்கியச் செய்திகள் குறித்து உரையாடி மகிழ்வார். தன்னைத் தேடிவரும் தமிழன்பர்களை உங்கள் சந்தேகங்களை ஜகந்நாதனிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்! என சுவாமிகள் சொல்லி அவர்களைக் கி.வா.ஜ.விடம் அனுப்புவதுண்டு.
சுவாமிகள் கி.வா.ஜ.வைப் பற்றிச் சொல்லும்போது, புன்முறுவலுடன், இவர் கலைமகளுக்கே ஆசிரியர் எனச் சொல்வதுண்டு.
ஒருமுறை சுவாமிகள் அவரிடம் ஒரு விந்தையான கேள்வியைக் கேட்டார்.
சம்ஸ்க்ருதம் என்று அந்த மொழிக்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா? சம்ஸ்க்ருதம் என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி என்று பொருள். அதுபோல் தமிழுக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது எனச் சொல்லமுடியுமா?
கி.வா.ஜ. அடக்கத்துடன், சுவாமிகள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன் என பதில் சொன்னார்.
எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? என்ற மகாசுவாமிகள் சொல்லத் தொடங்கினார்.
`தமிழில் ழ என்ற ஒலி இருக்கிறதே, அது சம்ஸ்க்ருதத்தில் கிடையாது. தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு ஒலி ழகரம். அந்த ஒலி தமிழின் தனிப் பெருமை.
அந்த எழுத்தை உள்ளடக்கி வரும் சொற்கள் எல்லாம் இனிமையைக் குறிப்பதாகவே இருக்கும். அழகு, குழந்தை, மழலை, பழம் என்றிப்படி ழ வரும் சொற்கள் எல்லாமே இனியவைதான்.
ஆகையால் ழகரததைத் தம்மிடம் உடையது என்ற பொருளில் தம் + ழ் = தமிழ் என வந்திருக்கலாமோ?`
மகாசுவாமிகளின் விளக்கத்தைக் கேட்டுக் கி.வா.ஜ. ஆனந்தம் அடைந்தார்.
உங்கள் விளக்கம் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது! என்றார் கி.வா.ஜ.
அந்த மகிழ்ச்சியிலும் ழகரம் இருக்கிறது! என்றார் மகாசுவாமிகள்!
………………………………..
