
விருட்சம் பிரசுரங்கள், “மனதுக்குப்பிடித்த கவிதைகள் -தொகுதி-1”
“நீங்களும் படிக்கலாம் தொகுதி 2” ஆகியன கிடைத்தன. நீங்களும் படிக்கலாம் தொகுதியில் என்னுடைய ‘நிலவொளி எனும் இரகசியத்துணை கட்டுரைகளும், கட்டுரைகளைப் போல சிலவும்” நூல் குறித்த அவருடைய பார்வையும், மனதுக்குப் பிடித்த கவிதைகளில் என்னுடைய ‘நீர் அளைதல்’ கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையும் இடம் பெற்றிருக்கின்றன.
ஆளுக்கொரு கவிதை என நூறு கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேர வாசித்தபோது சமகால தமிழ் கவிதைகளின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஒருவாறு அனுமானிக்க முடிகிறது. பாரதி, பாரதிதாசன், திரிசடை, வைத்தீஸ்வரன், தி.சோ.வேணுகோபாலன், ஷண்முகசுப்பையா, கண்ணதாசன், ஆகியோரின் கவிதைகளை, ழாக் ப்ரெவரின் மொழிபெயர்ப்பான கவிதை- ஆகியவற்றை இடையிடையே வாசிக்கும்போது
கலைடாஸ்கோப்பில் ஒரு வடிவம் கலைந்து புதியதாய் ஒரு அடுக்குதல் தோன்றுவது போல இருந்தது. ஒரு புன்னகை இன்னொரு புன்னகைக்கு தடையமற்று வழிவிடுவது போல.
