வரிசை/உமா பாலு


வரிசை எப்போதும் அழகுதான்
காலை பிரார்த்தனை பள்ளிக்
குழந்தைகளின் வரிசை
குளத்தில் வாத்தின் பின் செல்லும்
குஞ்சுகளின் வரிசை
அவற்றை ச்சுற்றி வட்டமாய்
விரியும் நீரலை வரிசை
வண்ண மலர்களை இறைத்தபடி
சாலையோர மரங்களின் வரிசை
மின்கம்பிகளில் அமர்ந்த
பறவைகளின் வரிசை
காற்றில் அசைந்து சிலிர்க்கும்
நாற்றுகளின் வரிசை
மார்கழித் தெருக்களின் கோல வரிசை
கோலத்து மாவைக் கொண்டு
போகும் எறும்புகளின் வரிசை
கோவிலில் ஒளிரும் தீப வரிசை
வாழ்வில் ஒளி வேண்டிய படி
கரம் குவித்த பக்தர் வரிசை
இப்படி

சில வரிசைகள் விதிவிலக்கு
கோடையில் தண்ணீர்க்
குடங்களின் வரிசை
ரேஷன் கடை வாசலில்
இலவசப்பொருட்களுக்கு
முண்டியடிக்கும மனித வரிசை
கள்ளுக்கடை வாசலில்
குடிமக்கள் வரிசை
உற்றாருக்காய் காத்திருக்கும்
சவக்கிடங்கின் நீத்தவர் வரிசை
கள்ள ஓட்டு போட நிற்கும்
கயவர்களின் வரிசை
குண்டு வீசி பறக்கும்
போர்விமான வரிசை
அடுத்த நாடு நோக்கி ஏகும்
அகதிகளின் வரிசை
அரசியல் வாதிகளின் பொய்
வாக்குறுதிகளின் வரிசை
மிலிடரி ஓட்டல் வாசலில் அலைபாயும்
அடுக்கிய சேவல்களின் வரிசை
இன்னும்….


12/4/22