
எனக்கு சொர்க்கம் வேண்டும்
அதைவிட சுதந்திரம் வேண்டும்
சுதந்திரமே மனிதனின் சுவாசம்
குடை கொடுங்கள் எனக்கு
வீசி நடக்கும் என் கைக்கு அது
விலங்கு என்றால்
மழைகூட எனக்குச் சம்மதமே
தேவாலாயத்தில் மண்டியிடத்
தயார்
பிராத்தனையை என் பிடரியில்
சுமத்தாதீர்கள்
பின் ஏசுவுக்கே நான் எதிரியாவேன்
என்னைச் சிறையிடுங்கள்
விரிந்த ஆகாயம்
விழியில் படும்படி
கூரையை மட்டும் கழித்துவிடுங்கள்
காலில் நங்கூரமிடலாம்
தூரத்தில் இருக்கட்டும்
ஒன்றிரண்டு ரோஜாத் தோட்டங்கள்
விண்மீனை உடையுங்கள்
நிலாவைக்கூட நீக்குங்கள்
வானத்தை மட்டும் கொடுங்கள்
என் பாடல்கள் எழுதப்பட வேண்டும் அதில்..
என் தேசத்தை எடுத்துக்கொள்க
சகமனிதர்களை அழைத்துச் செல்க
மண்ணின் மணத்தை மட்டும்
விட்டுவிடுங்கள்
என் இதயம் அதில்தான்
உறங்குகிறது
என்னைச் சுற்றி கல்லறை கட்டலாம்
ஒரு சில கண்ணதாசன் கவிதைகள் இருக்கட்டும் உள்ளே
வாளால் என்னை வெட்டலாம்
ஆனால் ஒரு துளி குருதி சிந்தாமல்
சிவப்பு என்றால் ரோஜா மட்டுமே
என்று என் மகனுக்குக் காட்டவேண்டும்
ரத்தமற்ற தலைமுறையை அவன்
காணட்டும்.
