ரமணாச்ரமம். ஏப்ரல் 14, 1950, வெள்ளிக்கிழமை/அரவிந்த் சுவாமிநாதன்

அன்று காலை முதலே பக்தர்கள் வரிசையாக பகவான் ரமணரது தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சுற்றியுள்ள கிராமத்திலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்து பகவானை தரிசித்துச் சென்றனர்.

பிற்பகல் நேரம். தனக்கு உதவியாக இருந்த தொண்டர் சிவானந்தத்திடம் ரமணர் முகமலர்ச்சியுடன் “தாங்க்ஸ்” என்றார். எழுதப் படிக்கத் தெரியாத அந்த பக்தர் அதன் பொருள் புரியாது பகவானைப் பார்க்க அவர், “அதுதான் ஓய்! சந்தோஷத்தைத் தெரிவிப்பதற்கான இங்க்லிஷ் வார்த்தை. ரொம்ப நன்றி என்றர்த்தம்” என்றார். அந்த இறுதிக் கணத்திலும் பகவானுக்குத் தன் மீதிருந்த கருணையையும் அன்பையும் எண்ணி நெகிழ்ந்து கண்ணீர் விட்டார் சிவானந்தம்.

மதிய நேரத்தில் ஆச்ரமத்து மயில்கள் ஒன்று கூடித் திடீரென அகவ ஆரம்பித்தன. வழக்கமாக அவை அம்மாதிரி அகவுவதில்லை என்பதால், ரமணர், அவற்றிற்கு உணவு கொடுத்தாகி விட்டதா என்று ஆச்ரமத் தொண்டரிடம் விசாரித்தார். ஆம் என்பது தெரிந்ததும் பின் ஏன் அவை கத்துகின்றன என்று கேட்டார்.

பகவானைச் சில நாட்களாக வெளியே காண இயலாத மயில்கள் அவர் இருந்த அந்தக் குறுகிய அறையின் வாசல்புறத்தே வரிசையாக வந்து நின்றன. பகவானின் கருணைப் பார்வை அவற்றிற்கும் கிடைத்தது.

மாலையாயிற்று. படுக்கையில் சாய்ந்த நிலையிலிருந்த தம்மை நேராக உட்கார வைக்கும்படித் தொண்டர்களிடம் சொன்னார் பகவான். அவ்வாறு அமர்த்தப்பட்ட சிலமணித் துளிகளில் அவருக்கு மூச்சு விடக் கஷ்டமாயிற்று. உடனே மருத்துவர், அதற்கான கருவியை மூக்கில் வைக்க ஆயத்தமானபோது, தமது கையை அசைத்து அதனை மறுத்தார். பின் கண்களை மூடிக் கொண்டார். அப்படியே சில நிமிடங்கள் கடந்தன.

அது சிறு அறை என்பதால் மருத்துவரும், ஆச்ரமப் பணியாளர்களுமாக ஒரு சிலர் மட்டுமே அறையில் இருக்க முடிந்தது. பிறர் வெளியே குழுமி பகவானையே பார்த்த வண்ணம் இருந்தனர். அங்கு பூரண அமைதி நிலவியது. பக்தர் ஒருவர் மெள்ள பகவான் இயற்றிய அக்ஷரமண மாலையைப் பாட ஆரம்பித்தார். கூடவே பிற பக்தர்களும் இணைந்து பாடத் துவங்கினர்.

அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா

அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா
அழகு சுந்தரம்போல் அகமும் நீயுமுற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா!

அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா

  • குரல் எங்கும் ஒலித்தது.

பாடலைக் கேட்டு மூடியிருந்த தம் கண்களை மெள்ளத் திறந்து பார்த்தார் ரமணர். அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. பின் மெள்ளக் கண்களை மூடிக் கொண்டார். சில நிமிடங்களில் ஆழமான மூச்சு ஒன்றன் பின் ஒன்றாய் வெளிப்பட்டது. அருகில் நின்றவர்கள் அடுத்த மூச்சை எதிர்பார்த்து நிற்க, உள்ளே சென்ற மூச்சுக் காற்று இதயத்திலேயே நின்றது. மூலத்தில் சென்றொடுங்கி, ஆன்மாவில் நிலைத்தது.

பகவான் ரமணர் மஹா சமாதி அடைந்தார். அப்போது நேரம் இரவு மணி 8.47.

பகவான் மஹா சமாதி அடைந்த அதே நேரத்தில் வானில் பகவானது அறையின் மேல் புறத்தில் பிரகாசமிக்க பேரொளி ஒன்று தோன்றி அருணாசல மலையை நோக்கி வேகமாகச் சென்று மறைந்தது.

ரமணரின் தாயார் அழகம்மை ரமணரைப் பிரசவிக்கும்போது ஒரு பார்வையற்ற கிழவி உடனிருந்தாள். அவள், ரமணர் அருட் குழந்தையாக அவதரிக்கும்போது சில நிமிடங்கள் மட்டும் ஒரு “பேரொளி”யைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். திருச்சுழியில் அன்று தோன்றிய அப்பேரொளி, திருவண்ணாமலையை நாடி வந்து, வாழ்ந்து, வளர்ந்து இறுதியில் அதனுடனேயே இரண்டறக் கலந்து ஒன்றானது. மனித குலம் உய்ய வழியானது.

பகவான் ரமண மஹரிஷி மகா சமாதி அடைந்த தினம் இன்று. (ஏப்ரல் 14, 1950)

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

One Comment on “ரமணாச்ரமம். ஏப்ரல் 14, 1950, வெள்ளிக்கிழமை/அரவிந்த் சுவாமிநாதன்”

Comments are closed.