
நாகேந்திர பாரதி/
‘தாழமுக்கம் ‘ என்ற தலைப்பே படிக்கும் ஆவலைத்தூண்டியது. படித்து முடித்தபின்தான் இந்தத் தலைப்பின்பொருள் விளங்கியது. நாம் நமது தொலைக்காட்சி, வானொலிச் செய்திகளில் மழைக் காலத்தில் அடிக்கடிகேட்போமே ,’ வங்கக் கடலில் உருவாயிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் , சென்னையிலே, அதற்கு மேலோ கீழோ, இன்றோ நாளையோ, மிதமாகவோ , கனமாகவோ , மழை பெய்தோ பெய்யாமலோ இருக்கலாம்என்று. அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தான்தாழமுக்கம். தாழ் ப்ளஸ் அமுக்கம். தாழ்வான அழுத்தம். எவ்வளவு அழகான ஈழத் தமிழ். இது போன்று இனிமையானதமிழ் வார்த்தைகள் இந்தக் கதை உரையாடல்களில் கலந்துவந்து , இந்தக் கதைக்கே, ஒரு சங்கீதப் பின்னணியைக்கொடுக்கிறது . கே வி மஹாதேவன் அவர்களோட கர்னாடிக்மியூசிக் பின்னணி மாதிரி.
வழக்கமான காதல் கதைதான். பெற்றோரை எதிர்த்துமணமுடிக்கும் காதலர்கள் படும் கஷ்டத்தைச் சொல்லும்கதைதான். ஆனால் அதற்குத் தேர்ந்தெடுத்திருக்கும் லாக்டௌன் காலமும் அதில் வேலை கிடைக்காமல் , வெளியேற முடியாமல் தவிக்கும் அந்தத் தொழிலாளிகாதலன் நிலையும் , நமக்கும் பரிச்சயமான இந்தக் காலச்சூழ்நிலையாய் இருப்பதால் நம்மை உடனே கதையோடுஒன்ற வைத்து விட்டது.
இரால் மீன் சாப்பிட ஆசைப்படும் காதல் மனைவிக்கு அதைவாங்கிக் கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கும்தன்னை எண்ணி வருத்தப்படும் அந்த இளைஞனின்ஆதங்கத்தோடு ஆரம்பிக்கும் இந்தக் காதல் அடுத்தடுத்துஆசிரியர் காண்பிக்கும் காட்சிகள் எல்லாமே மென்மையானகாதல் காட்சிகள்.
ஆரம்பத்தில் கோயில் நந்தவனத்தில் அவள் பூப்பறித்துமாலையாக்கி கடவுளுக்குப் படைக்கும் கைங்கரியத்துக்குஇடைஞ்சலாக , பக்கத்தில் கோயில் கட்டுமான வேலைசெய்து கொண்டு இருக்கும் அவன் ரேடியோவை அலறவைத்துக் கொண்டு பாட்டுக் கேட்பது. அதை அவள்நிறுத்தச் சொல்லும் போது அவன் வம்பு வளர்ப்பது , பிறகுமறுநாள் அவன் அவளுக்காக அதை நிறுத்துவது ,
‘ Pity follows love ‘ என்று ஒரு shakespearen வரி வருமே. இரக்கத்தைத் தொடர்ந்து காதல் வந்துடும் என்று. அதுமாதிரி , அவன் அவளுக்காகத் தனக்குப் பிடித்தமானசினிமாப் பாடல்களையே நிறுத்திட்டான்னாதும் , அவன்மேலே ஒரு பிரியம் வந்துடுது அவளுக்கு.
சில நாட்களிலே அவளுக்கும் அந்தப் பாட்டுக்களைக்கேட்கும் ஆசை வந்து , ‘எனக்காகப் பாட்டை ஒருத்தரும்நிப்பாட்ட வேண்டாம் , மெல்லப் போடலாம் , பிரச்னைஇல்லை ‘ என்று கேட்பது, என்று மோதலில் ஆரம்பித்துகாதலில் முடியும் அந்தக் காட்சிகளும் வருணனைகளும்அந்த நந்தவனத்தின் நந்தியாவட்டைப் பூக்களும் , பொன்னூச்சிப் பூக்களுமாய் நம் முன் மலர்கின்றன. நீங்கஅதெல்லாம் படிச்சு அனுபவிக்கணும்.
அவர்கள் பரிமாறிக் கொண்ட புன்னகைகள், பார்வைகள்தொடர்ந்து , அவள் பரீட்சையில் இரண்டாம் முறை தோல்விஅடைஞ்சுடுறா. எதிர் பார்த்தது தானே. காதல் பாடம்படிக்கும்போது மற்ற பாடம் எல்லாம் மனதிலே ஏறாதுதானே.’அவனை விட வேறொரு வெகுமதி தனக்குத் தேவைஇல்லை ‘ என்று அவள் எண்ணத் தொடங்கி விட்டாள் ‘ என்றவரிகளில் அந்தக் காதலின் ஆழத்தை நமக்குக் காட்டிவிடுகிறார்.
பிறகென்ன, சாப்பாட்டுக்குக் கஷ்டப்படாத, நடுத்தர வர்க்ககுடும்பத்தைச் சேர்ந்த அவள் , அன்றாடம் வேலை செய்துபிழைக்கும் இவனை மணமுடித்து , அந்த ஓலைக்குடிசையில், மண் தரை வீட்டில் வாழ்க்கையைஆரம்பிக்கிறாள்.
இந்த நேரம் லாக் டவுன் வந்துடுது. இந்த லாக் டவுனைப்பத்தி சொல்றப்போ தான், நமக்கும் நமக்குத் தெரிந்தஎவ்வளவு பேர் அன்றாட கூலி வேலை செய்யும் எவ்வளவுபேர், எப்படி எல்லாம் வறுமையில் கஷ்டப்பட்டார்கள் என்பதுநினைவுக்கு வந்து, கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது .
வெளியிலும் போக முடியாமல், வேலையும் கிடைக்காமல், சாப்பாட்டுக்கு அரிசி இல்லாமல் , நண்பன் ஒருவன்கொண்டு வந்து கொடுக்கும் கழிவு மரக்கறிகளை சமைத்துஉண்டு கொண்டிருக்கும் அந்த வறுமை நிலையைக் காட்டும்இடங்களில் எல்லாம், அந்த வறுமையையும் மீறி , அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அன்பையும், காதலையும் ஆசிரியர் வெளிப்படுத்தும் இடங்கள்உணர்ச்சிகரமானவை.
இங்கே ஆண் பெண் மன உணர்வுகளையும் அருமையாசொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
சவுகரியமான இருந்த இவளைக் கஷ்டப்படவைச்சுட்டோமேன்னு அவன் புழுங்கிக்கிட்டே இருப்பான். அவள் அமைதியா எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு அமைதியாஇருப்பா.
ஒன்றிரெண்டு காட்சிகள் .
காலையிலே எந்திரிச்சதும் அடுப்பில் குவிந்திருந்தசாம்பலை அள்ளி உள்ளங்கையில் ஏத்திக்கிட்டு அவபாட்டுக்கு பல்லு விளக்கப் போறா. இவன் பார்த்துவருத்தப்படுறான்.
“சாம்பலைத் தேய்த்து பல் விளக்கிக் கொண்டிருந்தஅவளைப் பார்க்க அவனுக்கு நெஞ்சு எரிந்தது. அவளதுவீட்டில் பற்பசை இல்லாமல் ஒரு நாளும் பல் துலக்கியிருக்கமாட்டாள் .’”
இன்னும் ஒரு காட்சி
இவன், யார் கிட்டேயும் எதுவும் கேட்க மாட்டான். ஆனால்இவளுக்காக நண்பனிடம் கேட்டு அவன் கொண்டு வந்துகொடுத்த மரவள்ளிக் கிழங்கையும் தேங்காயையும் இவள்கிட்டே குடுக்கிறான். ,
அதை அவிக்கப் போட்டுட்டு வர்றாள் அவள் ‘இண்டையப்பாட்டை ஒருவாறு சமாளிச்சுப் போடலாம்’ என்றபடி , அவனிடம் தேநீரை நீட்டி விட்டு அவன் அருகே அமர்ந்தாள் . அவன் அவளது நெற்றியை வருடி விட்டான் ‘ .
அவள் நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த குங்குமம்அவளுக்கு ஒரு புது சோபையைத் தருவது போலிருந்தது.
அப்போது ‘ தாழ முக்கம் ‘ ஏற்பட்டு, மழை பொழியஆரம்பிக்கிறது .
அவனை நெருங்கி உட்கார்ந்து கொண்டு ஒவ்வொருமிடாறாய் தேநீரை உறிஞ்சிக் கொண்டு மழையை வேடிக்கைபார்க்கத் தொடங்கினாள். காற்றில் குளிர் கூடத்தொடங்கியது . அவள் அவனது தோள்களைக் கட்டிக் கொண்டாள் .
அவனுக்கு தேநீரின் ருசியையும் அவளின் நெருக்கத்தையும்அனுபவிக்க முடியாமல் மனம் தடுமாறிக் கொண்டுஇருக்கிறது .
இந்த நேரத்திலே பொதுவா யாருக்கும் என்ன நினைப்புவரும். உங்களுக்குத் தெரியாதது இல்லே. ஆனா, இங்கேதான் அந்த காதல் அன்பு வெளிச்சிடும் பளிச்சிடும் வரிகள்வர்றது. .
“
அவன் நினைக்கிறான்.
“இரவு குளிர் கூடினால் ,ஆனா போர்வை இல்லாமல் , அவள்குளிரில் கொடுகப் போகிறாளே எனத் தோன்றியது . ‘
அவனே அவளுக்குப் போர்வையாய் மாறக் கூடிய அந்தசந்தர்ப்பத்திலே கூட,, அவளுக்குப் போர்வை வாங்கிகொடுக்க முடியாமல் இருக்கிறோமோ என்ற நினைப்புவருகிறதே, அது உடலை மீறிய உள்ளக் காதல் அல்லவா.
அந்த அன்பையும் , காதலையும் , காதலித்து மணந்தஅவளை சரியாகக் கவனிக்க முடியாமல் இருக்கும் இந்தலாக் டௌன் காலத்து கஷ்டத்தை ,தனது இயலாமையைநினைத்து அவன் தவிக்கும் தவிப்பை வெளிப்படுத்தும்இடங்கள் உருக்கமான இருக்கின்றன.
நீங்கள் படித்து ரசிக்க வேண்டும். என்னைப் போல் ரெம்பஉணர்ச்சி பூர்வமானவராய் இருந்தால் படிக்கும் போதே, உள்ளுக்குள் அழ வேண்டும்
அதன் பின், அவள் அவித்த அந்த மரவள்ளிக் கிழங்கைஅவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பாதிமரவள்ளிக் கிழங்கை அவன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது ஒருவன் கத்திக் கொண்டு வருகிறான்.
‘இந்த மழையினால் பேயாட்டம் ஆடும் பனை மரம் வெட்டஆள் தேடுகிறார் ‘ என்று
உடனே இவன் கிளம்பி விடுகிறான். வேலைக்குப் போனாஉடனே காசு கிடைக்குமே. அவளுக்கு வேண்டியதைவாங்கிடலாமே .
‘சாப்பிட்டுட்டுப் பொங்கோவனப்பா ‘ ராகினியின் குரல்அவனை இழுக்க அவன் திரும்பிப் பார்த்தான்.
நீர் சாப்பிடும். நான் வரேக்கை அரிசி வாங்கி வாறன் , நாளைக்கு இறாலோடைதான் சாப்பாடு ‘
அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை .
எந்தத் தாழமுக்கம் வந்தாலென்ன என்பது போல் அவன்உறுதியோடு நடக்க ஆரம்பித்தான்.
என்று முடிக்கிறார்.
ஷக்ஸ்பியரின் ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா விலே ஒருஇடம் உண்டு. ஆண்டனி கிளியோபாட்ரா கிட்டேசொல்வான்.
Let rome melt in tiber,
Here is my space
‘ரோமாபுரியே டைபர் நதியில் மூழ்கினால் என்ன, இதோஇருக்கிறது என் இடம். இவள் மடி ‘ என்று .
அதைப் போல், தாழமுக்கு வந்து எவ்வளவு சேதம் வந்தால்என்ன, எனக்கு ஒரு வேலை கிடைக்கப் போகிறது , இவளுக்கு இவள் விரும்பிய இறால் மீன் வாங்கி வந்துகொடுக்கப் போகிறேன். அது போதும் ‘ என்று
கஷ்டங்களைக் கொடுக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அந்தக் காதல் தம்பதியருக்கு, அந்த லாக் டவுன் காலத்தில்கஷ்டம் தீர்க்க வந்து விட்டதாக முடிக்கிறார். வறுமையிலும்ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் அந்தக் காட்சிகளை எல்லாம், இனிமையான ஈழத் தமிழில் கவிதைகளாகப் படைத்திருக்கும் விதத்தில் இந்தக் காதல்கதையை வித்தியாசப் படுத்திக் காண்பித்திருக்கிறார்ஆசிரியர் தாட்சாயிணி அவர்கள். அவர்க்கு வாழ்த்துக்கள். விருட்சம் அழகியசிங்கருக்கு நன்றிகள்
