
நிறை கர்ப்பிணிப் பூனை ஒன்று
உன் வாசலருகே, அடுக்கக மாடிப்படி கீழே
சிறார் சைக்கிள்கள் சப்பு சவறுகள் நடுவே
தளர்ந்து குடியேறிருக்கிறது
அதற்கு நீ வட்டிலில் சோறும் பாலும் கொடுத்தாய்
அவற்றை பூனை ஏறிட்டும் பார்க்கவில்லை
அடுக்கக சிறுவர்களும் சிறுமிகளும்
கூடிக் கூடி பூனை உப்பிய வயிறோடு
ஒருக்களித்து படுத்து சீறுவதைப் பார்த்தார்கள்
ஓடிவிட்டார்கள்
பூனையின் ரோமம் உதிர்ந்தால் கூட பாவம்
என்று சொல்லிப் போனார் முதியவர்
உனக்கு இப்படியொரு பொறுப்பு
தலைமேல் ஏறிவிட்டதேயென திகைத்திருக்கிறாய்
எலும்பில்லா மீன், கோழி இறைச்சி வாங்கி
வட்டிலில் வைத்து நீட்டுகிறாய்
அதையும் சீந்துவதில்லை பூனை
என்ன செய்ய என்ன செய்ய
பூனைக்கு ஒரு வாழ்க்கை ஏழு ஜென்மங்கள் என்கிறார்கள்
சுகப்பிரசவத்திற்கு பௌர்ணமி தாண்டவேண்டுமாம்
எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும்
பூனை பிழைத்துக்கொள்ளுமாம்
பூனையோடு உறவு ஏற்பட பூனையாகவேண்டும்
புத்தரோடு உறவு ஏற்பட புத்தராக வேண்டும்
உன் அடிவயிற்றில் நோவு
அலை அலையாய் எழுகிறது
எந்த திட்டமிடுதலுமின்றி
பூனை உன்னை தன் இமைகளற்ற கண்களால் வெறிக்கிறது
மெதுவே நெருங்கி வந்து சிணுங்கி
மீனிறைச்சியைக் கடிக்கிறது
நீ அதன் தலையை வருட ஒப்புக்கொடுக்கிறது
ஒரு ஒளிர்வின் பிரகாசத்தில் நீ பிறக்கிறாய்
எது எந்த ஜென்மத்தில் என அறியாதபடிக்கு
சிதறிய அரி நெல்லிக்காய்கள் போல பட்டுக்குட்டிகள்

அருமையான வர்ணனை