வாழ்க்கைப் பழம்/–தமிழ்மணவாளன்


தொரட்டியை வைத்து
பழம் பறிக்கும் விழைவில்
நிமிர்ந்து பார்க்கையில்
கனிகள்… கனிகள்…
கிளைகள் தோறும்….

அந்தப் பழங்கள் அனைத்தும்
என் வாழ்விற்கானவை….
ஒரு கனி… ஒரே ஒரு கனி
என் வாழ்வானது….

பறிக்க யத்தனிக்கையில்
வாழ்க்கைக்கான
பழத்தைப் பறிக்க வேண்டும்..
வாழ்வின் கனியைக்
கொய்தல் பெரும் துயர்…

தொரட்டிக்குப் பெரும்
மன உளைச்சல்….

இந்தக் கணம் வரை
காப்பாற்றிய திருப்தி
கரைகிறது
அடுத்த கண அச்சத்தில்…

அப்போது தான்
நீ வந்தாய்…..
தொரட்டியை என்னிடம்
கொடுங்கள்
நான் பறிக்கிறேன் என்கிறாய்…

மரத்தில் தொங்கும்
ஒரு கனி என் வாழ்வென
அறிவாயா….

உன் அன்பின் விழிகளில்
என் வாழ்வை சமர்ப்பிக்கிறேன்…

என் வாழ்க்கைக் கனியை
அல்ல….
எனக்கான….

நமக்கான
கனியைப் பறிக்கிறாய்….

நிகழ்தோறும்
தொரட்டியாய்த் தவிக்கும்
என் மனம்…

One Comment on “வாழ்க்கைப் பழம்/–தமிழ்மணவாளன்”

Comments are closed.