
காலை 7 மணிக்கு குவிகம் கிருபானந்தன் போன் செய்து ஒரு ‘சாஃப்ட் நினைவூட்டல்’ என்றார். காலை 11 மணிக்கு அவர் வீட்டில் ஒரு சிறிய கூட்டம் – 15 பேர் கூடிய ஒரு கூட்டம் – காந்தி நூல் நிலையம் பொறுப்பாளர் ம.நித்யானந்தம் கோயில்கள் பற்றிப் பேசினார். அவருடன் கோயில்களுக்குச் சென்றிருந்தவர்கள், தனியாகப் பல திருத்தலங்களை தரிசித்தவர்கள் என ஒரு சிறிய, அறுபதைத் தாண்டியவர்களின் உரையாடலாய் அமைந்தது அந்தச் சந்திப்பு.
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள், பாடல் வைப்புத் தலங்கள் எனத் தென்னகத்தின் பல சிவத்தலங்களைப் பற்றியும், அவற்றின் இருப்பிடம், செல்கையில் ஏற்பட்ட அனுபவங்கள், பின்னால் உள்ள கதைகள் என பேசுமொழியில் ஒரு நீரோட்டமான பேச்சு – சுந்தரர், திருநாவுக்கரசர் பற்றிய கதைகளைச் சொல்லும்போது சிரித்தபடியே வீட்டில் பேசும் மொழி நடையில் அவர் சொன்னது சுவாரஸ்யம். அவரு என்ன செய்வாரு, பாவம்; அங்கேயும் சொல்லி, இங்கேயும் சொல்லி சுந்தரரை சிவபெருமான் அலைக்கழித்ததை மிக இயல்பாகச் சொன்னார்! கோயில்கள் சிதிலமடைந்திருப்பதற்குக் காரணம் அவைகளைப் போற்றிப் பராமரித்த தலைமுறையினர் மாறி, வேலை நிமித்தமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ கோயில்களை விட்டுச் சென்றுவிட்டதுதான் என்றார். ஒரு வேளை பூஜைக்குக் கூட வழியில்லாத பல கோயில்களில், காவல் இருப்பவர்கள்தான் பார்த்துக்கொள்கிறார்கள், பூஜை உட்பட என்றார். சில கோயில்கள் இருளடைந்து, வெளவ்வால் நாற்றமுடன் நாதியற்றுக் கிடப்பதை அவர் சொன்னபோது, பத பதைக்கிறது நெஞ்சம் – அடப் பாவிகளா, தமிழும், சமயமும், கலையும், நாகரீகமும் தழைத்தோங்கிய தமிழகக் கோயில்களுக்கா இந்த நிலை என்று மனது வருந்தியது உண்மை.
திருவெற்றியூர், திருவாரூர் மற்றும் பல சிறிய, பெரிய பெயர் தெரியா பாடல் பெற்ற தலங்களைப் பற்றி அரிய தகவல்களைச் சொன்னார். கிருபானந்த வாரியார் சுவாமிகளை பல முறை மேற்கோள் காட்டினார். பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள் என வாழ்ந்து வழிகாட்டிய பல சுவாமிகளைப் பற்றி போகிறபோக்கில் குறிப்பிட்டார்.
108 திவ்யதேசங்கள் குறித்தும் – நவதிருப்பதி, அண்ணன் கோயில், ஶ்ரீரங்கம் என – பேசினார். முருகனின் திருத்தலங்கள் குறித்துச் சொல்லும்போது, அறுபடை வீடுகளைத் தவிர மற்ற எல்லா திருப்புகழ்த் தலங்களும், சிவன் கோயில்கள் உள்ளெயே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஶ்ரீமுஷ்ணம், திருவள்ளூர் தலங்களுக்குச் சென்றதையும், வேதாரண்யம் (கடல்வழியே 20 கிமீ தூரத்தில் இலங்கை மேற்குக் கடற்கரை!) கும்பகோணம், சீர்காழி, மாயூரம் கோயில்களுக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களை சிரிப்பாகச் சொன்னார்.
கண்ணிழந்த சுந்தரர் எப்படி நான் திருவாரூர் செல்வது என்று கேட்க, ஒரு கைத்தடியைக் கொடுத்தாராம் – கோபம் கொண்ட சுந்தரர், கண்ணே தெரீயவில்லை, கைத்தடி எதற்கு என்று வீச, எதிரே இருந்த நந்தியின் கொம்பு உடைந்துபோயிற்றாம். இன்றும் பூண்டி சிவன் கோயிலில் உடைந்த கொம்புடன் நந்தியைக் காணலாம் என்ற ஒரு செய்தியைச் சொன்னார். உள்ளூர்க்காரர்களுக்கே, இந்தக் கோயிலைப் பற்றித் தெரியாதது சோகமான செய்தி!
எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் விசேஷம், அதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி விரிவான கட்டுரைகள் (லேடீஸ் ஸ்பெஷல்) எழுதியிருக்கும் மோகன் அவர்களும், திருப்புகழ் தலங்களைப் பற்றி எழுதி வரும் ஹரிஹரன் அவர்களும் இடையிடையே தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.
தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், சேர மண்டலம், கன்னியாகுமரி என திருத்தலங்களை ஒரு பருந்துப் பார்வையாக காண்பித்துக்கொடுத்தார் நித்யானந்தம்! வித்தியாசமான அனுபவம்.
எல்லாம் சரி, நீர் என்னய்யா செய்தீர்? கண்களை மூடி மனதில் ஒரு தலவலம் வந்துகொண்டிருந்தேன் – கோயில்களைப் பற்றிய கூட்டம் என்பதால், இனிப்பான பானகமும், நீர் மோரும், வாழைப்பழமும் கொடுத்து உபசரித்த கிருபானந்தன் தம்பதியினருக்கு நன்றியுடன், வாழ்த்துகள்!
