காப்பி/பா.ராகவன்

இன்று காலை ஒரு வினோதமான அனுபவம். காப்பி குடிக்கலாம் என்று அசோக் நகரில் புதிதாகத் திறந்துள்ள மனோஜ் பவனுக்குச் சென்றேன். மணி ஒன்பதரை இருக்கும். உள்ளே நுழைய முடிந்ததே தவிர அமர இருக்கை இல்லை. அவ்வளவு கூட்டம். பலர் காத்திருந்தார்கள். பெயரைக் கொடுத்துவிட்டு அப்படி அமருங்கள் என்று சிப்பந்தி சொன்னார். ஒரு காப்பிக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது என்று கிளம்பிவிட்டேன்.

பழைய தேசிமனே இருந்த இடத்தில் மஹாஸ் என்று புதிதாக ஓர் உணவகம் திறந்திருக்கிறார்கள். அங்கே போகலாம் என்று பார்த்தால் வண்டி நிறுத்தும் இடத்திலேயே இடமில்லை. அங்கும் அவ்வளவு கூட்டம். ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் வீட்டில் சமைக்கக்கூடாது என்று ஜிஓ ஏதாவது வந்திருக்கும் போல என்று நினைத்துக்கொண்டு சரவண பவனுக்குச் சென்றேன்.

பில்லர் அருகே முன்னர் இரண்டு சரவண பவன்கள் இருக்கும். இப்போது ஒன்றை மூடி ஒன்றை மட்டும் வைத்திருக்கிறார்கள். உள்ளே சென்றபோது நம்ப முடியாத அளவுக்கு காலியாக இருந்தது. என்னோடு சேர்த்து ஒன்பது பேர். காப்பிக்குச் சொல்லிவிட்டு அமர்ந்தேன். சரியாக இருபத்து மூன்று நிமிடங்களுக்குப் பிறகே காப்பி வந்தது. அதுவும் சகிக்க முடியாத தரத்தில். என் அலுவலகத்துக்கு அருகே உள்ள சுதா டீ ஸ்டாலின் ஓனர் மோகன் இதைவிட நூறு மடங்கு அருமையாகக் காப்பி போட்டுத் தருவார்.

சரவண பவனின் தர வீழ்ச்சி குறித்து நிறையப் பேசியாகிவிட்டது. ஆனால் இன்றைக்குத்தான் ராஜகோபால் எவ்வளவு பெரிய கலைஞர் என்பதும் அதைக் காட்டிலும் எத்தனை உன்னதமான ரசிகர் என்பதும் சரியாகப் புரிந்தது. ஓர் உணவகத்தின் மீது அடிக்‌ஷன் உருவாக்குவது என்பதெல்லாம் எளிதே அல்ல. மெனு கார்டில் உள்ள ஒவ்வோர் உணவுக்கும் ஒரு பிரத்தியேகச் சிறப்பை வடிவமைத்திருப்பார். குறிப்பாகக் காப்பி, டீ, வெள்ளிக்கிழமை கதம்ப சாம்பாரெல்லாம் சர்வதேசத் தரத்தில் இருக்கும். சரவண பவனின் எந்தக் கிளைக்குச் சென்றாலும் அணுவளவும் ருசி மாற்றம் இராது. காசி தியேட்டர் சரவண பவனில் ஒரு காப்பியைக் குடித்த கையோடு இன்னொன்று ஆர்டர் செய்த காலமெல்லாம் நினைவுக்கு வந்தது. இனி எப்போதும் அக்காலம் திரும்பப் போவதில்லை.

கலைஞனாகவோ ரசிகனாகவோ இல்லாத வெறும் முதலாளிகளுக்குக் குட்டிக்கரணம் அடித்தாலும் அந்த சூட்சுமம் எல்லாம் பிடிபடாது.

One Comment on “காப்பி/பா.ராகவன்”

  1. காபி என்பது மிகவும் ருசியான பானம் என்பதில் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை.ஆனால் “காபி மகாத்மியம்”ஐ இவ்வளவு விரிவாக விவரிக்க வேண்டுமா என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது.ஒருவேளை,நான் காபி சாப்பிட்டால்,எனது இடது கண் நரம்புகளை பாதிக்கப்பட்டு,Laser சிகிச்சை எடுத்துக் கொண்டு,ஓரளவு மட்டும் பார்வையை மீட்டெடுத்து,காபியை முழுமையாக விட்டதன் பாதிப்பாக இருக்கலாம்.

Comments are closed.