
டி.ஆர்.மகாலிங்கம் அவரது பணத்தை இழந்தபோது அவரைச் சூழ்ந்திருந்த அனைவருமே அவரை முற்றிலும் கைவிட்டதாகவும் கடுமையான நெருக்கடியில் வாடிய அவரை, கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற படமே மீட்டதாகவும் சொல்லப்படுகிறது. கண்ணதாசனே தயாரித்த அந்தப்படத்துக்கு டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் துணிந்து கதாநாயகனாக ஆக்கினார். அதை அன்றைய இயக்குநர்களும் உச்ச நடிகர்களும் எல்லாம் தடுத்தார்கள். காரணம் டி.ஆர்.மகாலிங்கம் அன்று சினிமாவின் மைய ஓட்டத்தை விட்டு வெகுவாக விலகிச் சென்றுவிட்டிருந்தார். ஆனால் மாலையிட்ட மங்கை ஒரு இசைப்படம் ஆகையால் கண்ணதாசன் துணிந்து அம்முடிவை எடுத்தார்.
படம் தொடங்கியபோது கண்ணதாசனின் தி.மு.க நண்பர்கள் ஒரு பிராமணனை அப்படத்தில் நடிக்கவைப்பதாகச் சொல்லி அவரை எதிர்த்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அன்றைய திராவிட அரசியல் சூழலில் பிராமண வெறுப்பு அத்தகைய உச்சத்திலிருந்தது. அவர்களை சமாதானம் செய்வதற்காக, தி.மு.கவின் கொள்கைகளை மறைமுகமாகப் புகழும் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ என்ற பாடலை கண்ணதாசன் டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்துப் பாடச்செய்தார். இப்படத்தில்தான் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘நானன்றி யார் வருவார்’ போன்ற காலத்தாலழியாத பாடல்கள் உள்ளன.
நானன்றி யார் வருவார் பாடலை கண்ணதாசன் மகாதேவி படத்துக்காக எழுதினாராம். எம். ஜி.ஆர் அப்பாடல் பிடிக்கவில்லை என்று நிராகரித்தார். ‘கண்மூடும் வேளையிலும்’ என்று ஏ.எம்.ராஜாவும் பி.சுசீலாவும் பாடும் பாடல்தான் அதற்குப் பதிலாக மகாதேவியில் சேர்க்கப்பட்டது.
இணையத்தில் இருந்து எடுத்தது
தகவல் : ஆர்.கந்தசாமி

இது போன்ற பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றும் தகவல்களும், பதிவுகளும் தேவைதானா? என்று விருட்சம் மின்னிதழ் ஆலோசித்து வெளியிடுவது ஆரோக்கியமானதாக இருக்கும்.