
ஒரு விதத்தில் நாம் தினமும் சிறிது இறக்கிறோம்; தினமும் சிறிது பிறக்கிறோம். நம் உடலில் உள்ள செல்கள் தினம் லட்சக் கணக்கில் இறப்பதாகவும், அவற்றுக்குப் பதிலாக லட்சக் கணக்கான புதிய செல்கள் பிறப்பதாகவும் சொல்கிறார்கள். அது போலவே உயிருள்ள மொழியில் சொற்களும் பிறக்கின்றன, இறக்கின்றன.
சொல்லுக்கு இயல்பாக வண்ணமோ, வாசனையோ, சுவையோ, எடையோ இருப்பதில்லை. ஆனால் பின்னர் சொல் மேல் அவை ஏற்றப் படுகின்றன. எந்த சொல்லும் நல்ல சொல் இல்லை. எதுவும் கெட்ட வார்த்தையும் இல்லை. ஆனால் நாளடைவில் அவ்வாறு ஆக்கப் படுகின்றன. உணரப் படுகின்றன.
சொல்லுக்கு வல்லமை உண்டா? சொல்லுக்கு வாளின் கூர்மையுண்டு. சொல்லுக்கு கொல்லும் ஆற்றல் உண்டு. வெல்லும் வல்லமையுண்டு. யாராலும் தாங்க முடியாத அளவுக்கு சொல்லுக்கு எடையுண்டு. சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கவும், அழித்து தரை மட்டமாக்கவும் சொற்களால் இயலும். குடும்பத்தை, உறவுகளை, நட்பை சொற்களால் உருக்குலைக்க முடியும்.
மகாபாரதம் குருஷேத்ரத்தை நோக்கி விரைவதற்கு பல காரணங்கள் உண்டு. பல இனக் குழுக்களுக்கு இடையிலான அரசியல் வேட்கைகள் என்ற புதிய வரலாற்றுக் காரணத்தை ஜெயமோகன் வெண்முரசு காவியத்தில் அழகாகப் புனைந்திருப்பார். மயன் வடிவமைத்த புதியஇந்திரப்ரஸ்த மாய அரண்மனையில் துரியோதனனின் சறுக்கலைப் பார்த்து நகைத்து துரோபதி, “குருடனின் மகன்,குருடன்” என்று சொன்னாள். அந்த சொற்கள் ஏற்கனவே பொறாமையால் எரிந்து கொண்டிருந்த துரியனின் மன அனல் மேல் நெய் பெய்தன.
சொல் சுடுமா? சொல் ஏராளமான இதயங்களைப் பொசுக்கியுள்ளது. “லதா, ஏன் இப்புடி செஞ்சே?” என்ற சொற்கள் ஒரு ஏழைப் பெண்ணின் சுய மரியாதையை, சுய கௌரவத்தை கிழித்தெறிந்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. “தலாக்” என்ற சொல் எத்தனை பெண்களின் கண்ணீருக்குக் காரணமாய் அமைந்திருக்கும்?
சொல்லப்படும் தருணத்தைப் பொறுத்து சொற்களுக்கு எடை கூடும். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த உலக மதத் தலைவர்களின் மாநாட்டில் பிற தலைவர்கள் வழக்கம்போல் “சீமான்களே! சீமாட்டிகளே! “என்று எல்லோரையும் விளித்த போது விவேகானந்தர், ”சகோதரர்களே! சகோதரிகளே!” என்று தொடங்கியது அரங்கத்தை மட்டுமல்லாது அகிலத்தையே அதிர வைத்தது.
அத்தனை பேரும் எதிர்த்து நின்றாலும் ஒருவரின் சொல்வன்மை சரித்திரத்தை மாற்றி வரையவும் முடியும். ஜூலியஸ் சீசரின் பிணத்தை வைத்துக் கொண்டு “Friends,Romans and countrymen!” என்று தொடங்கி ஆன்டனி பொழிந்த சொற் பெருக்கு ரோம் தேசத்தின் வரலாற்றைத் திருப்பிப் போட்டது.
சொல்பவரைப் பொறுத்தும் சொற்கள் உணர்ச்சி கொப்பளிக்க முடியும். “வானம் பொழிகிறது! பூமி விளைகிறது!….” சொல்லருவியை இப்போது கேட்டாலும் ஜாக்ஸன் துரையைத் தவிர அத்தனை பேருக்கும் தேசிய உணர்ச்சியும், ஆத்திரமும் கொப்பளிக்கும்.
சொல் செல்வமா? பெருஞ்செல்வம். சொல்லின் செல்வன் யார் தெரியுமா? அனுமன். அப்படி அழைத்தவர் கம்பன். அரசியல்வாதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். உடன் இருக்கும்போது நடமாடும் பல்கலைக் கழகம் என்பார்கள். விலகிய பின். இல்லை, எலிமென்ட்ரி ஸ்கூல் கூட இல்லை, திண்ணைப் பள்ளிக் கூடம் தான் என்பார்கள்.
எந்த வேறுபாடுமின்றி எவரையும் சொல் சுடுகிறது. “என்னை அப்புடி சொல்லிட்டானே? அவன் எப்புடி அதை சொல்லலாம்? அப்புடி சொன்னப்பறமும் நான் உயிரோட இருக்கணுமா?’’ என்று சொல்லி சொல்லி மருகாதவர் எவரும் இல்லை. உறவையும், நட்பையும் உதறி வாழ்நாள் முழுவதும் வன்மம் சுமந்து சீரழிவோர் உண்டு.
ஜெயமோகன் இணைய தளத்தில் குரு நித்ய சைதன்ய யதியின் ஒரு கட்டுரையைப் பற்றிய ஒரு குறிப்பு வந்தது. ஆவலுடன் சுட்டியைச் சொடுக்கினேன். அற்புதமான கட்டுரை. அது வெளியிடப் பட்டிருந்த இணைய இதழின் பெயர் “மயிர்”. சொற்களுக்கு வர்ண பேதமோ, வர்க்க பேதமோ இல்லை. புனிதமான சொற்கள் என்றும் கெட்ட வார்த்தைகள் என்றும் நாளடைவில் நாம்தான் வண்ணமேற்றுகிறோம்.
“கெட்ட வார்த்தை” என்று சாரு நிவேதிதாவும், “கெட்ட வார்த்தை பேசுவோம்” என்று பெருமாள் முருகனும் நூல்கள் எழுதியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகள் என்று அழைக்கப் படும் சொற்களைப் பற்றி நாஞ்சில் நாடன் ஒரு அழகான,ஆழமான ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். பாலியல் தொடர்பான சொற்களுக்கே பெரும்பாலும் இந்தக் கதி நேரிடுகிறது.
அவசியம் ஏற்படும் போது, அல்லது அது லாபகரமானது என்று உறுதியாகத் தெரியும்போது நாம் அரசியல் கோஷங்களைப் பொருட்படுத்தாமல், தலைவர்களின் அனுமதியின்றி அல்லது ரகசியமாக அவர்களின் ஆசீர்வாதத்துடன் எதிரி மொழியைக் கூட கற்றுக் கொள்கிறோம். குழந்தைகள் மொழி கற்கும் திறனோடு ஒப்பிட்டால் நமக்கு கால் பங்கு திறன்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. மொழிகளை அவற்றின் சொற்களின் வல்லமையறிந்து பயன் படுத்துவது நமக்கு கூடுதல் ஆற்றலைத் தரும்.
அம்மான் என்ற சொல் முன்பு கிராமத்தில் புழங்கியது. இப்போது அதைப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அத்தான் என்று யாரையாவது அழைத்தால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இவை பழைய செல்கள் ஆகி விட்டன.
அண்ணா என்ற சொல்லுக்கு அவ்வளவு ஈர்ப்பு உண்டு. அரசியலிலும். அண்ணா, சகோதரி என்று சிலர் அழைக்கும் போது சிலர் மனமுடைந்து போவதுமுண்டு. அப்படி அழைக்காமல் அங்கிள்,ஆன்டி என்று அழைத்தால் வேறு காரணத்துக்காக சிலர் வருந்துவார்கள். அண்ணா என்பது அப்பாவையும், கணவரையும், அம்மாயி என்பது பெண்ணையும் சில மொழிகளிலும் இனக்குழுவிலும் குறிக்கும்.
ஒரு காலத்தில் ஒரு மொழிதான் இருந்தது. பேபல் என்ற கோபுரத்தை வான் முட்டும் உயரத்தோடு எழுப்ப முயன்றபோது மனித அகந்தையைக் கண்டு சினம் கொண்ட கடவுள், கட்டும் மனிதர்களை வெவ்வேறு மொழிகள் பேசுபவர்களாக மாற்றினார். யார் பேசுவதும் யாருக்கும் புரியாமல் பயங்கர குழப்பம் ஏற்பட்டு,கோபுரம் கட்டுவது பாதியில் நின்றது என்று பைபிளில் ஒரு கதை வரும்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்பது போல ஒரே மொழி என்று இருந்து விட்டால் எவ்வளவு வசதியாக இருக்கும்! எல்லோரும் இதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அது எந்த மொழி என்பதில்தான் சிக்கல் வரும். குறைந்த பட்சம் ஒரு சொல்லுக்கு ஒரே பொருள் மட்டுமே என்று கொண்டு வரலாம். என்ன, எழுத்தாளர்களுக்கு பல்லைப் பிடுங்கியது போல் ஆகி விடும். சொல் விளையாட்டுக் “கவிஞர்கள்” தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடும்.
வேண்டாம். சொல்லின் அழகே அதற்கு அநேக அர்த்தம் இருப்பதுதான். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் பன்முக வாய்ப்பே சுவாரஸ்யம் தரும். கடவுளில் கூட, உலகை ஒரு கடவுள் நிர்வாகம் செய்யும் மதங்களை விட பல கடவுள்கள் பங்கெடுக்கும் மதங்களில் சகித்துப் போவதும், அனுசரித்தலும் அதிகம் என்றும் வன்முறை குறைவு என்றும் படித்தேன். உண்மைதானோ என்று தோன்றியது.
@@@@@@@

சொல் நல்ல விளக்கம்.