நம்பிக்கை/அன்னபூரணி

“எல்லாம் உங்களாலதான்! புள்ளைக்கு மட்டும் எதுனா ஆச்சுன்னா நா மனுஷியா இருக்க மாட்டேன் பாத்துக்கங்க” என்று கண்களில் கண்ணீருடன் தன் கணவணைப் பார்த்து கோபமாகச் சொன்னாள் ராகவி. 

“நா என்னடீ பண்ணேன்?” என்று அதிர்ந்து போய் கேட்டான் சீனு. 

“உங்களாலதான். புள்ள காது குத்துக்கு நம்ம குலதெய்வம் கோவில்ல பொங்கல் வெச்சி படையல் போடணும்னு எவ்ளோ சொன்னேன். கேட்டீங்களா? கையில துட்டில்ல துட்டில்லன்னு சொல்லி தள்ளி போட்டீங்க. இப்ப என்னாச்சு? புள்ளக்கு காலைலருந்து வயித்தால போகுது. துறுதுறுன்னு சுத்தி வர புள்ள எப்டி சோர்ந்து சோர்ந்து படுத்துக்கறான் பாருங்க. மொதல்ல பொங்கல் வெச்சி படையல் போட ஏற்பாடு செய்ங்க. அப்பதான் புள்ளைக்கு சரியாகும்.” என்று கதறினாள் ராகவி. 

“அதுக்கும் இதுக்கும் ஏன் முடிச்சி போடற. நேத்திக்கு சினிமாக்கு போய்ட்டு வரப்ப சொல்ல சொல்ல கேக்காம நீ வாங்கி குடுத்த கலரு குடிச்சிட்டுதான் புள்ளைக்கு வயித்தால போகுது. மொதல்ல டாக்டர்கிட்ட போய் ட்ரிப்ஸ் போடலாம் வா.” என்றான் சீனு. 

ராகவி ஒத்துக் கொள்வதாயில்லை. 

அவள் கத்துவதை பொருட்படுத்தாமல் மகனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான் சீனு. 

உரிய நேரத்தில் சரியான சிகிச்சை செய்து மகனைக் காப்பாறினார்கள். 

அதன்பிறகு சீனுவுக்குப் பிடித்தது சனி. 

“புள்ள நல்லாகணும்னு நா மாரியாத்தாளுக்கு நேர்ந்துக்கிட்டேன். ஐயனார் சாமிக்கு வேண்டிக்கிட்டேன்.” என்று பெரிய பட்டியலுடன் வந்த ராகவி ஒவ்வொன்றுக்கும் சீனுவின் சேமிப்பை கரைத்தது மட்டுமில்லாமல் மொட்டையடிப்பது பூக்குழி இறங்குவது போன்ற சில நேர்த்திக்கடன்களை சீனுவை செய்ய வைத்தாள்.

எதையும் தட்ட முடியாமல் செய்து முடித்துவிட்டு களைத்துப் போய் அமர்ந்த சீனு, 

‘ஐயோ! இவ அட்டகாசம் தாங்க முடியல. கடவுளே! நா உன்ன நம்பறேன்தான். ஆனா இப்டி கண்மூடித்தனமான பக்திக்கு நா ஆளில்ல. நா நாத்திகனா மாறிடறேன். கடைசி வரை நாத்திகனாவே இருந்திடறேன். அதுக்காக என்னை திரும்பியும் இவள மாதிரி பழி வாங்கிடாத கடவுளே!’ என்று கண்ணீருடன் கும்பிட்டான் சீனு. 

♥♥♥♥♥