
நினைவுகள் – 2
கூட்டத்தை ரத்து செய்ய மறுத்த இராஜாஜி
‘சைதை தேரடி’ என்று அழைக்கப்படுகின்ற சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் தேர் நிறுத்தும் இடத்தின்முன் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. திலகர் திடல், மயிலை மாங்கொல்லை போல் புகழ்பெற்ற இந்த இடத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளன. இங்கு 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட மூதறிஞர் இராஜாஜி அவர்கள், ‘காந்தியடிகள் நம்மை விட்டு மறைந்து விட்டாலும் அவரது கொள்கைகளை நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வரவேண்டும்’ என்று பேசினார்.
அவரது பேச்சின் தாக்கத்தால் உருவானது தான் இந்த நூல் நிலையம். சைதை பகுதியானது நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. எனவே, அவர்களுக்கு கல்வி கற்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக காந்திய சிந்தனைக் கொண்ட இளைஞர்கள் இணைந்து நூலகத்தைத் தொடங்கினர்.
1954 ஆம் ஆண்டு நூலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கலந்துக் கொள்வதாக இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் அன்று மறைந்து விட்டார். உடனே இராஜாஜி அவர்களைத் தொடர்பு கொண்டு, ‘கூட்டத்தை ரத்து செய்து விடலாமா?’ என்று கேட்டபோது, ‘ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதென்பது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். நான் வருகிறேன்’ என்று கூறி கூட்டத்திற்கு வந்தார்.
அன்று இராஜாஜி அவர்கள் எவ்வளவு துயரத்தில் இருந்தார் என்பதை அவர் நூலக பார்வையாளர் குறிப்பில் எதுவும் எழுதாமல் கையெழுத்து மட்டும் இட்டதையும், கூட்டத்தில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசியதையும் வைத்து அறிந்துக் கொள்ள முடிந்தது. அன்று மறைந்தவர் இராஜாஜியின் உற்ற நண்பரும், எழுத்துலகின் ஜாம்பவானுமாகிய திரு. ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
கல்கி அவர்கள் நூலகத்திற்கு வருகை தரக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை என்றாலும் அவரது மகன் திரு. கல்கி இராஜேந்திரன் அவர்கள் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் கலந்துக் கொண்டுள்ளார். அதுபோல் பொன்னியின் புதல்வர் எழுதிய திரு. சுந்தா அவர்கள் 1986-ல் நூலக ஆண்டு விழாவிற்கு வருகை தந்துள்ளார்கள்.
இராஜாஜி அவர்களுக்கு பிறகு அவரது மகன் திரு. சி.ஆர். நரசிம்மன் அவர்கள் 1986 ஆம் ஆண்டு நூலக ஆண்டு விழாவிற்கு வருகை தந்தார்கள். இவர் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினராகவும், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். தந்தை – மகன் என்று இருவரும் நமது நூலக விழாக்களில் பங்கேற்றது இது இரண்டாவது நிகழ்வாகும்.
தந்தை – மகன் என்ற வகையில் முதன்முதலில் 1954-ல் திரு. தமிழ்வாணன் அவர்களும், அவரது மகன் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற நூலகத்தின் 33 ஆவது ஆண்டு விழாவிலும் கலந்துக் கொண்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 67 ஆவது ஆண்டு விழாவிலும் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளார்.
அதுபோல திரு. அகிலன் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற நூலக விழாவில் கலந்துக் கொண்டுள்ளார். அந்த விழாவில் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் கலந்துக் கொண்டார். இங்கு இடம் பெற்றிருக்கும் அகிலன் அவர்கள் இருக்கும் புகைப்படம், அவரது வாழ்க்கை வரலாறான ‘எழுத்தும் வாழ்க்கையும்’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. திரு. அகிலன் அவர்களின் மகன் திரு. அகிலன் கண்ணன் அவர்கள் 1992 ஆண்டு நடைபெற்ற 40 ஆவது ஆண்டு விழாவில் கலந்துக் கொண்டுள்ளார்.
மேலும் திரு. கண்ணதாசன் – அவரது மகன் திரு. காந்தி கண்ணதாசன், எழுத்தாளர் திரு. உமாசந்திரன் (முள்ளும் மலரும் எழுதியவர்) – அவரது மகன் திரு. R. நடராஜ், ஐ.பி.எஸ். ஆகியோரும் நூலக விழாவில் கலந்துக் கொண்டுள்ளார்கள். அதைப் பற்றி தனியாக எழுதுகிறேன். இவ்வாறு தலைமுறைகள் கடந்து எங்கள் நூலகத்திற்கு வந்து விழாக்களில் கலந்துக் கொண்டது பெருமைதானே!
