மேரி/அழகியசிங்கர்

மேரியை அவள் தாய் மாமா பிலிப்பை திருமணம் செய்துகொள்ள அவர்கள் வீட்டில் வற்புறுத்தினார்கள். அவள்தான் சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஏன்?
நாத்திகக் கொள்கையில் பிடிவாதமானவன் பிலிப். நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து
அவன் சர்ச் போய் ஏசு சாமியை வேண்டிக்கொண்டது இல்லை. அவன் வீட்டில் பலர் வற்புறுத்தி அவனைத் திருத்த முடியாது என்று விட்டு விட்டார்கள். உண்மையில் மேரியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டானே தவிர அவனிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை.

  1. நன்றாகப் படித்து விட்டு கல்லூரியில் லெக்சரராய் இருக்கிறான்
  2. குடிப்பழக்கம் சுத்தமாக இல்லை
  3. கெட்ட சகவாசம் எதுவுமில்லை

யோசித்தாள் மேரி. பிலிப்பை அவள் மனதார விரும்பினாள். ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது?

ஒருநாள் தனியாக அவனிடம், ‘ நான் உன்னைத் திருமணம்
செய்துகொள்கிறேன்,’ என்றாள்.

அவன் உற்சாகத்துடன் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

“நீ என்கூட வர முடியுமா?”

“எங்கே கூப்பிட்டாலும்
வரேன்,” என்றான்.

பக்கத்தில் இருக்கும் சர்ச்சுக்கு அழைத்துக் கொண்டு போனாள்

அவன் நாய்க்குட்டி மாதிரி அவள் பின்னாடி சென்றான்.