ஜெ – அறுபது/சுரேஷ் கண்ணன்

*

என்னுடைய இத்தனை ஆண்டு கால புத்தக வாசிப்பில், இலக்கிய நுகர்வில், திரைப்படக் கலையில் எத்தனையோ ஆசான்களை, குருமார்களைப் பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு மேதையிடமும் ஒருதுளியை மானசீகமாக கைவணங்கிப் பெற்றிருக்கிறேன். ‘என்தரோ மஹானுபாவுலு அன்தரிகீ வன்தனமுலு’ என்பதுதான் என் தீர்மானமான பாலிசி.

ஆனால் இந்த வரிசையில் சிலர் உச்சமாக நின்று நம்மிடம் மிக அந்தரங்கமாக நெருங்கி விடுவார்கள். அப்படியாக சில கறாரான பெயர்களைச் சொல்ல வேண்டுமென்றால் அந்தப் பட்டியலும் பெரிதாகவே நீளும்.

இந்த உச்ச வரிசையில் நான் எப்போதுமே சுஜாதாவைத்தான் முதலில் வைப்பேன். என் எழுத்தில் ஒரு துளி சுவாரசியமோ, திறனோ இருக்கிறது என்று மற்றவர்களும் – நானும் கூட – கருதினால், அது ஏகலைவன் போல அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட அகத்தூண்டல்தான்.

*

இதற்கு அடுத்தபடியாக நான் மிக நெருங்கிச் சென்றது ஜெயமோகனிடம்தான். ஒரு சிந்தனையை எப்படி வரலாற்றுப் பார்வையில் தொகுத்துக் கொள்வது, அதை கச்சிதமான உரைநடையில் எப்படி மாற்றுவது, ஹாவென்று பிரமிக்க வைக்கும் சொற்கோர்வைகளை எப்படி உருவாக்குவது, இலக்கியத்தை எவ்வாறு அணுகுவது என்று பல ரகசியங்களை அவருடைய தொடர்ச்சியான எழுத்திலிருந்து நான் பெற்றுக் கொண்டேன்.

இந்த வகையில் அவரும் எனக்கு ஆசான் என்று சொல்லிக் கொள்வதை பெருமையாக நினைக்கிறேன். என்னுடைய ஒரு நூலைக் கூட அவருக்குத்தான் ‘சமர்ப்பணம்’ செய்தேன். ஆனால் தயக்கம் கருதி அவருக்கே இதை நான் அறியப்படுத்தவில்லை.

இணைய வசைகளுக்கு, காழ்ப்புகளுக்கு அஞ்சியோ, தயங்கியோ இதை ரகசியமாக வைத்துக் கொள்வதென்பது ஓர் இழிவு. அவர் மீது நியாயமான விமர்சனங்கள் இருக்கலாம். ஏராளமான அநாவசிய வசைகள் இருக்கலாம்.

ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி, அவர் ஒரு தனிநபர் சரித்திரம், அறிவியக்கத்தின் முக்கியமான பிரதிநிதி என்பதை மாற்றுக்கருத்துள்ளவர்கள் கூட ரகசியமாகவாவது ஒப்புக் கொள்வார்கள். கற்றோரை கற்றோரே காமுறுவர். சிறார்கள் இதை அறிய மாட்டார்கள்.

*

பொதுவாக நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில்லை; மனமார ஏற்றுக் கொள்வதும் இல்லை. அது இன்னுமொரு நாளே.

என்றாலும் சில விதிவிலக்குகள் உண்டு. ஜெயமோகன் அறுபதாவது வருடத்தை நிறைவு செய்திருக்கிறார். ‘பல மேடு பள்ளங்கள் இருந்தாலும் ஒரு நிறைவான வாழ்வை கடந்து கொண்டிருப்பவர்’ என்று அவர் மீது எனக்கு ரகசியமான பொறாமையே உண்டு.

இந்த நாளில் ‘இன்னுமோர் நூற்றாண்டு இரும்’ என்று பணிவடக்கத்துடன் அவரை வாழ்த்தவே எனக்குத் தோன்றுகிறது.