
‘கட் , கட்’ என்ற இயக்குனர் , மேகநாதனிடம் வந்து அலுத்துக் கொண்டார். ‘ என்ன தம்பி , பத்து டேக் ஆயாச்சு. என்ன ஆச்சு ‘ என்றவரின் மனதில் ஓடிய எண்ணம் .’ எவ்வளவு பெரிய நடிகன் இவன், இவன் சிவனடியாராய் நடித்த படம் பார்த்து விட்டு வந்த ரசிகர் கூட்டம் எழுப்பிய ‘நமச்சிவாய’ கோஷம். ஆழ்வாராய் நடித்த படம் பார்த்து தியேட்டருக்குள்ளேயே ஒலித்த ‘ நமோ நாராயணா ‘ நாமம். என்ன ஆயிற்று இன்று. ‘யோசிக்க யோசிக்கத் தெளிவானது அவர் மனம்.
மேகநாதனிடம் சென்று சொன்னார் .”தம்பி, நீங்க ‘ ஆண்டவனே, என்னை ஆத்திகனாகவே இருக்க விடு ‘ ன்னு சொல்லுங்க. நாங்க டப்பிங்கில் மாத்திக்கிறோம். ” என்றதும் எழுந்து வந்தான். ஒரே டேக் தான். உணர்ச்சிப் பிழம்பாகி கண்ணீர் விட்டு அவன் சொன்ன அந்த வசனத்திற்கும், உடல் மொழிக்கும், அனைவரும் கை தட்டினார்.
டப்பிங்கில் ‘ஆத்திகன் ‘ நாத்திகனாக மாற்றப்பட, சரி பார்த்துக் கொண்டு இருந்த இயக்குனரின் திரையில் மேகநாதன்,
“ஆண்டவனே, என்னை நாத்திகனாகவே இருக்கவிடு ,” கண்ணில் நீர் மல்க வேண்டிக் கொண்டான்.
————-நாகேந்திர பாரதி
குவிகம் 100 வார்த்தைக் குறுங்கதைப் போட்டி
இந்தக் கதையில் தலைப்பைச் சேர்த்து மொத்த வார்த்தைகள் 105
