இருக்கவிடு! ” கண்ணில் நீர்மல்க/அன்னபூரணி

காலை ஆறு மணியாகியிருந்தது.

இன்று ஆஃப்! நிம்மதியாகத் தூங்கலாம் என்ற நினைப்பில் மண் விழுந்தது.

“நாழியாறது! இன்னும் எழுந்துக்கலயா?” என்று மாமியாரின் அதிகார அழைப்பு!

என் விதியை நொந்துகொண்டே எழுந்தேன்.

சமையல் மற்றும் வீட்டு வேலைகள் முடிந்து அக்கடாவென்று அமர நினைத்தால், அடுத்தடுத்த கட்டளைகள் வந்துகொண்டேயிருந்தன.

அரிசி களைந்து உலர்த்தி காய வைத்து மிஷினுக்கு எடுத்துச் சென்று நைசாக அரைத்து எடுத்து வந்து சீடை முறுக்கு என்று வகை வகையாகச் செய்து வைத்து வீடு முழுதும் கிருஷ்ணர் பாதம் வரைந்து முடித்து எழும் போது மாலை நான்கு மணி ஆகி விட்டது!

‘ஒரு மனுசிய பத்து மணி நேரம் தெணறத் தெணற வேல வாங்கிருக்காங்க! மனசாட்சியில்லாதவங்க!’ என்று மனதுக்குள் திட்டினேன்.

“ஆமாம்டீ! எல்லா பட்சணமும் செய்துட்டேன்! கிருஷ்ணர் பாதம் கூட போட்டாச்சு!” என்று தன் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மாமியார்.

‘எனக்கு பட்சணம் வேணும்னு அந்த கிருஷ்ணன் கேட்டானா? ஆண்டவனே! என்னை நாத்திகனாகவே இருக்கவிடு! ” கண்ணில் நீர்மல்கக் வேண்டிக்கொண்டேன்!

♥♥♥♥♥♥♥