ஜெயமோகன் 60

எழுத்தாளர்கள் பொதுவாக பிறர்மேல் ஒவ்வாமை கொண்டவர்கள், தன்னை மையமாக்கியே எப்போதும் எண்ணுபவர்கள் என்பதனால் அது இயல்பானதே. நான் தனிமையை நாடுபவன், பெரும்பாலும் தனிமையில் இருப்பவன் என்றாலும் இன்னொரு பக்கம் செழுங்கிளை சூழவே எப்போதும் இருந்திருக்கிறேன். அதன்பொருட்டு என்னால் இயன்றவரை சமரசம் செய்துகொண்டிருக்கிறேன். என்னைப்போல இத்தனை நண்பர்கள் புடைசூழ இருக்கும் இன்னொரு எழுத்தாளன் தமிழில் இருந்திருக்க மாட்டான் என்றே சொல்வேன். எனக்கு முன் இவ்வாறு இருந்தவர் சுந்தர ராமசாமி.

எனக்கு ஊர் தோறும் நண்பர்கள் இருக்கிறார்கள், நலம் நாடுவோர் இருக்கிறார்கள். சென்ற இடமெல்லாம் பெருந்திரளென என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள், எனக்கு உகந்தவர்கள். என் ஒன்றாம் வகுப்பில் அருகிலிருந்த படித்த நண்பர்கள் இன்றும் நண்பர்களே. மறைந்தவர்கள் தவிர. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை இயல்பும் ஒவ்வொரு வாழ்க்கை முறையும் கொண்டவர்கள். அவர்களுடன் இணைந்து இது வரை வந்திருக்கிறேன். பல நட்புகள் அரைநூற்றாண்டை நெருங்கிவிட்டன. முப்பது நாற்பது ஆண்டுக்கால நட்புகள் இன்றும் அதே நெருக்கத்துடன் தொடர்கின்றன.

இத்தனை ஆண்டுகளில் நானே தேவையில்லை என்று விலக்கி வைத்த மிகச்சிலரே இருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆறே ஆறுபேர். அணுக்கமானவர்கள் என்று சொல்லத்தக்க கிட்டத்தட்ட ஆயிரம் நட்புகளில் ஆறுபேர் என்பது ஒப்புநோக்க மிகக்குறைவு. அவ்வண்ணம் விலக்கும் முடிவை மிகமிக யோசித்து, மிகமிக வருந்திய பின்னரே எடுத்திருக்கிறேன்.

தங்களுடைய செயல்களால் ஏதோ ஒரு வகையில் என்னை ஆன்மிகமாக கீழிழுக்கிறார்கள் என உணர்ந்தவர்களை மட்டுமே அவ்வண்ணம் விலக்கியிருக்கிறேன். அதன் வழியாக என்னுடைய படைப்பியக்கத்திற்கு தொந்தரவாகிறார்கள் என்று நான் ஐயமற எண்ணியவர்களை மட்டுமே அவ்வண்ணம் விலக்கியிருக்கிறேன். எழுத்தாளனாக அதைச் செய்யாமலிருக்கவே முடியாது.
தகவல் : ஆர் கந்தசாமி