வெளிச்சம்/மதுவந்தி

வெளிச்சம்
கண்களை இறுக மூடி,
ஊசியளவு திறந்த இமைவழி
திரையரங்கு இருட்டுக்குள்
திகில் படத்தின் நடுவில்
இதம் தந்த வெளிச்சக் கீற்று.
நீண்டிருக்கும் சாலையில்
கறுத்திருக்கும் வழியில்
கண் கூசும் எதிர் வாகனத்தின்
தலைவிளக்கு வெளிச்ச வெள்ளம்.
அயர்ந்துறங்கும் இரயில் பயண
இரவொன்றில், மெதுவாய்த்
தொட்டெழுப்பி விசாரிக்கும்
காவலரின் டார்ச் லைட்டின்
வட்ட வெளிச்சம்.
வடிவங்கள் மாறும் வெளிச்சத்தோடு
உறவு தொடர்ந்து.
மனதுக்குப் பிடித்தது
எதுவெனக் கேட்டால்,
கடவுளும் கைவிட்ட
குக்கிராமத் தங்கலில்,
வேப்பமரத்தடி கட்டிலில்
படுத்தபடி பார்த்த, மேகங்களற்ற
கருநீல வானின்
நட்சத்திர வெளிச்சம். மதுவந்தி 24.04.22