அன்பு’/பி.ஆர். கிரிஜா

என்னை இப்படி தெருவில் தேங்காய் சில்லைப் பொறுக்க வைத்து விட்டாயே! கடவுளே! நீ இல்லவே இல்லை!’ என்று முணுமுணுத்துக்கொண்டே கோவில் வாசலில் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் தன்னருகில் உரசி வந்து நின்ற பெரிய காரைப் பார்த்து சற்றே திடுக்கிட்டான். நல்ல வேளை! அவன் சற்று நகர்ந்ததால், கார் அவன் மீது ஏறவில்லை. அவன் அப்படியே ஒரு கணம் உறைந்து நின்றான். அந்த பெரிய காரிலிருந்து பளபளவென உடையணிந்திருந்த ஒரு பணக்காரர் அலட்சியத்துடன் கீழே இறங்கினார். சிறுவன் அவர் அருகில் ஓடிப்போய் கையை நீட்டினான். அவனை உதறித் தள்ளி விட்டு அவர் வேகமாக கோவிலுக்குள் சென்று விட்டார். சிறுவனும் மெதுவாக நடக்கத் தொடங்கினான்.

அப்போது வழியில் ஒரு பெரியவர் மயங்கிக் கிடந்தார். பசி மயக்கம் போலும். சிறுவன் குனிந்து தேங்காய் சில்லை உடைத்து அவர் வாயில் போட்டு அவரை அணைத்துக் கொண்டான். பெரியவரும் கண் திறந்து அவனை அன்புடன் நோக்கினார்.

சிறுவனும் புன்னகையுடன்,’ ஆண்டவனே! என்னை நாத்திகனாகவே இருக்க விடு!’ கண்ணில் நீர் மல்க வேண்டிக் கொண்டான்!