
கிருமலைராயன் அவையில் அரியணை இரண்டு முழம் வளர்ந்து
இடம் கொடுத்தபோது பாடியது.
வெள்ளைக் கலை உடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியா சனத்தில் அரசரோடு என்னைச்
சரியா சனம்வைத்த தாய்.
வெண்ணிற ஆடையை உடுத்து. வெண்ணிற அணிகலன்களை அணிந்து. வெண்தாமரைப்பூவில் வீற்றிருப்ப வளாகிய கலைமகளே, தூய அரியணை மீது அமர்ந்திருக்கும் அரசர்களோடு. என்னையும் சமமாக வீற்றிருக்கக் கூடிய இருக்கையை அமைத்து உதவிய என் தாய் ஆவாள்.
கலை – ஆடை, பணி – நகை, கமலம் – தாமரை, அரி ஆசனம் அரியணை. சரி அசனம்-சமமான இருக்கை. ‘சரியா சனத்து வைத்த தாய்’ என்பது, பாட வேறுபாடு. இப்பாடல், முப்பது பாடல்களையுடைய ‘சரசுவதி மாலை’ என்னும் சிற்றிலக்கியத்தில் உள்ளதாகவும், பிறர் பாடிய பாடலாக வேறு நூல்களில் காணப்படுவதாகவும் அறிஞர் கருதுவர்.
