
நாற்புறத்திலும் ஆட்களில்லாத
அதிகாலைநேரம் எப்போதாவதுதான் வாய்க்கிறது
அதுவும் வெகுசில நிமிடங்களே நீடிக்கின்றன
வெறிச்சோடிய சந்துகளின் கட்டிடங்களில்
நடமாட்டமற்ற தோற்றம்
இன்னும் எத்தனை நிமிடங்கள் நீடிக்குமோ
கையில் ஒரு தூக்குடன் சிறுவன் சட்டையின்றி
வாசலைவிட்டு இறங்கி
முன்னே செல்கிறான்
சந்துமுனை தேநீர் கடையில் பாத்திரத்தையும் காசையும் தந்துவிட்டு நிற்கும்
சிறுவனருகில் சென்று
நானும் ஒரு குவளை தேநீர் கேட்டு நிற்கிறேன்
அவனது விழிகள் எங்குமின்றி
அவனுடனேயே இருக்க
சுற்றிலும் அலைகின்றன என்விழிகள்
பருக தேநீர் தந்தபின்
சிறுவனது பாத்திரத்தில் தேநீர் நிரப்பி
ஒரு தினசரியில் காகிதத்தில் வடைகளை
மடித்து அளித்ததும்
வந்த திசையை இப்போதுதான பார்க்கிறான்
அவனிடம் பேசும் பிரயாசை இருப்பினும்
எத்தனிக்கவில்லை
தேநீர் கடைக்காரரும் பேசாமல் இருந்தார்
திரும்பி எங்கும் பார்க்காத அவன்
வீட்டை அடையும்வரை தென்பட்டான்
எனக்கருகில் இன்னும் இருவர்
தேநீர் அருந்துகின்றனர்
வடை சாப்பிடும் எனது எண்ணத்தை
கடையில் ஒலிக்கும் வானொலியின்
ஆரோக்கிய ஆலோசானையில் குரல் தடுத்துவிட்டது
பலரின் வருகையால் நிலைமாறிய சந்தில்
வடையின் பொன்நிற மொறுமொறுப்பில்
தென்படும் கருவேப்பிலை வெங்காயத்துண்டுகள்
நாசியில் உளுந்தின் மணமென
சிறுவன் வந்த வாசலைத் தாண்டியதும்
மீண்டும் தேநீர்கடைக்கே திரும்பினேன்

அன்றாட ஆரோக்கியத்தை வலியுறுத்தும்
குரலின் இடையீடு
அப்படியே ஒருபுறமிருக்கட்டும்.
-எஸ். சண்முகம் –
(எண் : 024)
