ஒரு வாரமாக இருட்டில் இருந்தேன்/மனுஷ்ய புத்திரன்

கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக கடும் பார்வைக் குறைபாடு பிரச்சினையால் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த மங்கிய கண்களோடுதான் ‘ மிஸ் யூ’ என்ற அவ்வளவு பெரிய புத்தகத்தை எழுதி முடித்தேன். ஆனால் பார்வைத்திறன் குறைபாடு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. எங்கும் கலங்கலான முகங்களையே கண்டேன். இரண்டாண்டுகளாக சரி செய்ய எடுத்த முயற்சிகள் லாக்டவுன் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் தள்ளிபோய்க்கொண்டேயிருந்தது. எம் பிறந்த நாள் அன்று தற்செயலாக என்னக்காணவந்த மதுரையைச்ச்சேர்ந்த சிநேகிதி Sabeena Saleem ( கண் விழித்திரை லென்ஸ் நிறுவனமொன்றில் மேலாளராக பணி புரிகிறார்) எனது பிரச்சினையை அறிந்து அவருடன் பணிபுரியும் செல்வாவுடன் இணைந்து சிகிட்சைக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். மேலும் இரு கண்களுக்கான மிகவும் விலை உயர்ந்த இரண்டு விழித்திரைலென்ஸ்களையும் அவரே பரிசாக ஏற்பாடு செய்தார். பெஸண்ட் நகர் எம்.வி மருத்துவமனையில் கடந்த வாரத்தில் இரண்டு கண்களிலும் லேஸர் சிகிட்சை நல்லபடியாக முடிந்தது. வெளிச்சத்தைகாணமுடியாமல் பெரும்பாலும் இராப்பகலாய் இருட்டிலேயே இருந்தேன். ஒரு புதிய உலகத்தில் வாழ்வதுபோல இருந்தது. பார்வையற்றவர்களின் உலகத்தை நினைத்து மனம் கரைந்துபோனேன். எழுத முடியாது. மொபைல் பார்க்க இயலாது. டிவி பார்க்க முடியாது. படிக்க முடியாது. கண்டதெல்லாம் மனத்திரை காட்சிகள் மட்டுமே. யாராவது நண்பர்கள் தேடி வந்து நான்கு வார்த்தை பேசிக்கொண்டிருந்தால் மனதிற்கு நன்றாக இருக்கும்போலிருந்தது. ஆனால் கண்ணில் காணும் இருட்டைவிட உறவுகளில் காணும் இருட்டு பெரிதல்லவா…

எனினும் என் கவிதை வாசகர்கள் என்னைத் தேடினார்கள் என்று அறிகிறேன். புற உலகில் எனக்கென மிஞ்சியிருப்பவர்கள் அவர்கள் மட்டும்தான்.

படிப்படியாக குணமடைந்து வருகிறேன்.

தேடிய நேயர்களுக்கு நன்றி.

( சபீனா மற்றும் செல்வாவுடன். சிகிட்சை தினத்தன்று)

One Comment on “ஒரு வாரமாக இருட்டில் இருந்தேன்/மனுஷ்ய புத்திரன்”

  1. விழியிருந்தும்
    பார்வையற்றோரின்
    விழிகளைத் திறக்கும் – கவி
    மொழியன்றோ
    உம் எழுத்துக்கள்!
    வெளிச்சம் தீட்டும்
    விருந்தாகும் – தங்கள்
    புதிய படைப்புகள்!

    வாழ்த்துகள்… ஐயா!

Comments are closed.