மேதைகளுக்கு மட்டும் அல்ல/வாசுதேவன்

பல மேதைகளின் மனைவியின் பெயர் கூட வெளியே தெரியாது. உ.வெ.சா வின் தொண்டும் அர்ப்பணிப்பும் எல்லாருக்கும் தெரிந்ததுதான். அவருடயை ‘என் சரித்தம்’ நூலில் தன் அன்னையை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன் மனைவிப்பற்றி ஒரு வரி கூட இல்லை. உ.வெ.சா மனைவி யார் என்பது பற்றி தெரியவில்லை.

வாழ்நாள் முழுவதும் கணவனுக்கு தொண்டாற்றிய அந்த பெண்மணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?. இதே போல், சத்யஜித் ரே மனைவி பிஜாய் ரே பற்றி பலருக்கு தெரியாது. அவருடைய அனைத்துப்படங்களின் திரைக்கதையை வாசித்து பல திருத்தங்களை செய்தவர். ரேவுக்கு கிடைத்த வெளிச்சம் பிஜாய்க்கு இல்லை.

ரித்விக் கடக் மனைவியும் தீவிர கம்யூனிஸ்ட். கடக் திரைப்பட மேதையாக இருந்தாலும் பொறுப்பற்ற கணவன்/தகப்பன். கடுமையாக குடிப்பவர். பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஐந்து குழந்தைகளை காப்பாற்றியது கடக்கின் மனைவி சுராமா கடக். 1940 ல் இந்திய அரசாங்கம் கம்யூனிஸ்டுகளை கைதுசெய்தது. சுராமாவும் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் இருந்தார்.

இதைப்பற்றி ஷில்லாங் சிறை அனுபவங்கள் என்ற நூலையும் எழுதினார். அப்பாவியான செல்லம்மாள் பாரதியை பார்க்கும்போது மனம் பாரமாகும். தெரிந்தவரையில் ஒரு விதிவிலக்கு உண்டு.

மார்க்வெஸ் மனைவி மெர்சிடைஸ் பார்ச்சா அற்புதமான பெண்மணி. மெர்சிடைஸ் இல்லையெனில் மார்க்வெஸ்ஸின் நூறாண்டு கால தனிமை என்ற காவியம் வெளிவந்திருக்காது. கொலாம்பியாவிலிருந்து மெக்சிகோவில் உள்ள பதிப்பகத்திற்கு அனுப்ப தபால் நிலையத்திற்கு சென்றபோது தபால் தலைகள் வாங்கக்கூட போதிய பணம் இல்லை.

நாவலின் எடையை குறைக்க சில அத்தியாயங்களை நீக்கி தபாலில் அனுப்ப மார்க்வெஸ் முயன்றபோது அவரை தடுத்து வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்களை அடகு வைத்த பணத்தில் அந்த நாவலை அனுப்பினார்.

பின்னாளில் மார்க்வெஸ் க்கு நோபல் பரிசு கிடைத்தவுடன் ஒரு பிரத்யேக ஜெட் விமானத்தை வாங்கி மனைவிக்கு பரிசளித்து கவுரவித்தார்.

மெர்சிடைஸ் பாக்கியசாலி! மார்க்வெஸ் போன்ற கணவர் வாய்த்ததெல்லாம் அபூர்வமாக நடக்கும். மேதைகளுக்கு மனைவியாக இருப்பதெல்லாம் பெரும்பாலும் சாபம்!