வண்ணதாசன் கவிதை

சின்ன வயதில் எங்கோ பார்த்த
ரேடியம் சட்டைப் பொத்தான் போல
மினுங்கும் பூனைக் கண்கள் உடைய
கருத்த பெண்ணை ’ மேடை ஒன்றில்
பார்த்ததும் எனக்கு என்னவோ செய்தது.
ஒக்கலில் இருக்கும் கைப்பிள்ளை யோடு
எஸ்.எட்டில் அவளும் ஏறிய சமயம்
பூனைக் கண்களை என்னிடம் தருவதாய்
லேசாய்ச் சிரித்தாள். பெற்றுக் கொண்டு
எஸ்.பத்தில் உள்ள முப்பத்து மூன்றைத்
தேடிப் பிடித்து அமர்ந்து கொண்டேன்.
பயணம் முடிந்து இறங்கும் வரைக்கும்
சுண்டெலி ஞாபகம் வந்ததே தவிர,
பாற்கடல் கண்ணில் படவே இல்லை.
கிட்டவோ தூரவோ பார்வை பிசகிய
என்னுடைய கண்ணே போதும் என்று
இரவல் கண்களைக் கழற்றி மெதுவாய்
எழும்பூர் நிலைய ஓரத்தில் வைத்தேன்.
பாம்பின் கால்கள் பாம்பறியும் என்றால்
பூனையின் கண்களை பூனைதான் அறியுமே.

(ஞானக் கூத்தன் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன்.
எனக்குப் பிடித்த , என் முன்னால் சுவடுகள் இட்டுப் போயிருக்கும்
அவர், எனக்குள் உண்டாக்கியிருக்கும் ஓசை ஒழுங்குடன் எழுதிப்பார்க்கத் தோன்றியது. ஓசை ஒழுங்கு மட்டும் அல்ல, அதையும் மீறிய அலைகளையும் அதிர்வுவுகளையும் உண்டாக்கிய எங்கள் காலத்திய அங்கதன் அவர்.)

One Comment on “வண்ணதாசன் கவிதை”

  1. வண்ணதாசன/கல்யாண்ஜி/ கல்யாணசுந்தரம்/ சாகித்ய அகாடமி கவுரவம் கொண்டவர் . இத்தனை பெருமைகள் கொண்டவர் எனினும் எங்கள் வங்கி பாரத ஸ்டேட் வங்கி இணை அதிகாரி என்று சொல்வதே பெருமை .வாழ்க வண்ணதாசன்.

Comments are closed.