திசை மாற்றி!/கு.மா.பா.திருநாவுக்கரசு

சந்திராஷ்டம நாளில்
நல்ல காரியம் செய்ய
பலர் தயங்குவதுண்டு!

சலனப்பட்ட மனநிலையில்
சகுனம் பார்த்து நடப்பதில்
பலருக்கும் நிறைவுண்டு!

பூனை…
வலம் போனால் என்ன?
இடம் போனால் என்ன?
மேலே பாய்ந்து குதறாமல்
இருந்தால் போதும் என்பர்;
பகுத்தறிவாளர்கள்!

இருவழிச்சாலையில்
வாகனங்களில் அணிவகுத்து
வலது பக்கமாக ஓட்டுவோர்
வலது சாரிகள்!
இடது பக்கமாக ஓட்டுவோர்
இடது சாரிகள்!

இந்தியாவில் எல்லோரும்
இடது சாரிகள்! -ஆனால்,
வல்லரசு நாடுகளில் பலரும்
வலது சாரிகள்!

ஊர்தியின் திசைமாற்றியை
உள்ளூரில் வலப்பக்கம்
பொருத்திக் கொண்டு
இடப்பக்க சாலைகளிலும்,
மேல்நாடுகளில் இடப்பக்கம்
பொருத்திக் கொண்டு
வலப்பக்க சாலைகளிலும்
நடப்பதே போக்குவரத்து!

கண்களின் திசைமாற்ற
முடியாத ஆந்தைகள்,
எண்திசையும் கழுத்தின்
திசைமாற்றிக் காணும்!

பழந்தின்னி வௌவால்கள்
செவியுணர்வால் திசைமாறும்!
பழுதடைந்த மின்விசிறிகள்
திசைமாற்றிச் சுழலும்!

திசைமாற்றிக் கொள்ளும்
சிந்தனைத் தெளிவுடைய
பகுத்தறியும் ஞானம்!