எஸ்.சண்முகம் கவிதை

எவ்வளவு கவனத்துடன் அமைதியாக இருக்க பழகினாலும்
மற்றொருபுறம் ஓயாமல் சத்தங்கள் வந்தடைகின்றன
கதவைமூடிவிட்டு விளக்கை அணைத்ததும்
பலர் நிறைந்துவிடுகின்றனர்

அமர இடமில்லாவிட்டாலும் நிற்பவர்களைத் தவிர்க்கவியலாது
பேச மறுத்தாலும் கேட்பதை கைவிடாமல் தொடர்கின்றனர்
பொருத்தமற்ற பதில்களை அளித்தாலும்
அதற்கொரு பொருத்தமான அர்த்தத்தை உரைக்கின்றனர்

வெளியேறினாலும் மீண்டுவிட்டோம் என்ற எண்ணம் வலுக்கவில்லை
ஒரு சிறு இடைவேளைக்காக
இங்கிருந்து அங்குசென்று வந்தேன்

கதவைத் திறந்ததும்
சுவர்களெங்கும் கையெழுத்துகள் நிறைந்துள்ளன
இவற்றிற்கிடையே கிட்டும் இடைவெளியில்
நானும் கையெழுத்திட ஆயத்தமாகிவிட்டேன்.