பாரதிதாசனின் கதைக் கவிதை /திருப்பூர் கிருஷ்ணன்

பாரதிதாசன் பிறந்த தினம் ஏப்ரல் 29


‘தொடக்கத்தில் ஆத்திகராக இருந்து பின் நாத்திகராக மாறியவர் பாவேந்தர் பாரதிதாசன். (கண்ணதாசன் தொடக்கத்தில் நாத்திகராக இருந்து பின் ஆத்திகரானவர்.)

பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று இறைவன் பகட்டிலும் ஆடம்பரத்திலும் இருக்கமாட்டான் என்பதை ஒரு கதை வடிவில் உணர்த்துகிறது:

ஒரு கிறித்துவ தேவாலயத்தில் இருந்த பாதிரியார், தேவாலயத்திற்கு வருபவர்கள் தங்க நகை, வெள்ளி நகை, ரத்தினம் இழைத்த நகை போன்ற எதையும் அணியாமல் எளிமையாக வரவேண்டும் என அறிவிப்பு வெளியிட்டார். வரும் அன்பர்கள் கூட்டம் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது.

அவர் மறுசிந்தனை செய்தார். வராமலேயே இருப்பதைவிட அணிகலன்கள் அணிந்து பகட்டாகவேனும் அடியவர்கள் அதிக எண்ணிக்கையில் வருவது நல்லது என்று எண்ணியது அவர் மனம்.

கண் இமை, உதடு, நாக்கு இவற்றில் கூட அணிகலன் அணிந்து வரலாம், கோயிலில் முகம் பார்க்க நிலைக்கண்ணாடியும் வைக்கப்பட்டுள்ளது என்று மறு அறிவிப்பு வெளியிட்டார். அன்றுதொட்டு ஏராளமானோர் தேவாலயத்திற்கு அணிகலன்கள் அணிந்து பகட்டாக வந்தார்கள்.

ஆனால் தேடித் தேடிப் பார்த்தார் பாதிரியார். ஒரே ஒருவர் மட்டும் வரவில்லை என அந்த அழகிய கவிதை முடிகிறது. வராத அந்த ஒருவர் யார் என அறிந்துகொள்ள வேண்டுமானால் முழுக் கவிதையையும் படித்து அதன் முடிவையும் படிக்க வேண்டும்! பாரதிதாசனின் கதைக் கவிதை இதோ:

‘தலைகாது மூக்குக் கழுத்துக் கை மார்பு விரல்
தாள் என்ற எட்டுறுப்பும்
தங்க நகை வெள்ளிநகை ரத்தினம் இழைத்த நகை
தையலர்கள் அணியாமலும்

விலை குறையும் ஆடைகள் அணிந்துமே கோயில் வர
வேண்டுமென்றே பாதிரி
விடுத்த ஒருசேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள் புருஷர்!

நிலைகண்ட பாதிரி பின் எட்டுறுப் பேயன்றி
நீள் இமைகள் உதடு நாக்கு
நிறைய நகை போடலாம் கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணாடியும் உண்டென

இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லோரும் வந்து சேர்ந்தார்,
ஏசுநாதர் மட்டும் அங்கு வரவில்லையே
இனிய பாரத தேசமே!’
…………………………………….

One Comment on “பாரதிதாசனின் கதைக் கவிதை /திருப்பூர் கிருஷ்ணன்”

  1. அரிய தகவல். பாவேந்தரின் அந்நாள் கவிதையிலுள்ள கவிநயம் வெகு நன்று. நல்ல பதிவு.

Comments are closed.