மழைக் காலம்/நாகேந்திர பாரதி

சகட்டு மேனிக்குச் சாத்தும் மழை
சன்னல் ஓரம் மின்னல் இடி

குளிரில் நடுங்கும் உடலின் உள்ளே
கூடும் பழைய மழையின் கோலம்

வரப்பு மேட்டில் வழுக்கிய சேறு
வயலில் ஊன்றி வளர்ந்த நாத்து

கண்மாய் நிரம்பி கரையை மீறியது
கோரைப் புல்லும் காணாமல் போனது

ஈரக் காத்தில் நடுங்கிய கோழி
தவிட்டுப் பானைக்குள் தஞ்சம் புகுந்தது

கிட்டிப் புள்ளால் கீறிய குழிக்குள்
கத்திக் கப்பல் சென்று சிக்கியது

மழைக்கு விட்ட பள்ளி விடுமுறையில்
சட்டையில் அடித்த சகதிப் புள்ளிகள்

புத்தகப் பையும் மழையில் நனைந்தது
சேர்ந்தே நனைந்த சைக்கிள் சவாரி

வெளியில் கொட்டும் மழையின் சாரல்
வருடிச் செல்லும் பழைய நினைவை

கையில் நடுங்கும் காப்பிக் கோப்பை
காலம் கரைந்ததைக் காட்டிச் செல்லும்