இனிக்கும் தமிழ் – 123/ டி வி ராதாகிருஷ்ணன்

நாம் அனைவரும் நம்மிடம் உள்ள அறியாமையை அகற்ற வேண்டுமெனில், அறியாமையை அகற்றும் திறன் படைத்த குருவிடம் செல்ல வேண்டும்.

மெய்யான குருவை சென்றடைவது அதிமுக்கியம் என்றும், அப்படி சென்றடைய
தவறினால் ஏற்படும் விளைவையும், திருமூலர் தன் திருமந்திரத்தில்
கூறியுள்ளார்.

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.

விளக்கம்:
அறியாமையினை நீக்கும் மெய் குருவினை கை கொள்ளாதவர், அறியாமை அகற்றும் நெறியே தெரியாத பொய் குருவினை மெய்யன கொள்வார் எனில், அங்கனம் வழிகாட்டத் தெரியாத குருடும், குருடும் கூடி குருட்டு ஆட்டம் கொண்டு குழியில் விழுவது போன்று பொய் குருவும், அவரை மெய்யன கொண்டோரும் அறியாமை என்னும் குழியில் விழுவது உறுதி