கைநழுவிச் சோப்பு/பேயோன்

முகமெல்லாம் தேய்க்கும் வரை
வேண்டுமென்றே காத்திருந்து
கைநழுவித் தரையில் விழும்
பாதிக் கரைந்த குளியல் சோப்பு.

என் வீட்டுக் குளியலறையில்
ஒரே சமயம் மூன்று பேர் நிற்கலாம்
சரியாக மூடாவிட்டால்
பெண் குரலில் திட்டும்
பழங்கால மின்தூக்கி போன்ற
இடத்தில் தேடச் சிரமம் இருக்கக் கூடாது
ஆனால்
தேடலுக்காகக் குளியலறைத் தரை
விரிவுபடுத்தப்பட்டுள்ளது
அப்போதுதான் தெரியவரும்.

தரையைத் தடவி முடித்து
பாத்ரூமில் இல்லை எனத்
தீர்மானித்து நிறுத்திய பின்
கண்ணைச் சுருக்கிச்
சிறிது திறந்து பார்த்தால்
எதிரிலேயே கிடக்கும் சோப்பு
கை பட்டிருக்க வேண்டிய இடத்தில்.

சாத்தியமான இடத்திலெல்லாம்
அலைந்து பார்த்தாயிற்று என்று
நினைத்த கைக்கு இந்த இடம் போய்க்
கிடைக்காதது எப்படியோ.

முகமெல்லாம் தேய்த்த பின்பு
நீச்சல் குளம் போல்
சத்தமின்றி பக்கெட்டுக்குள்
பாய்வதும் உண்டிந்த சோப்பு.


One Comment on “கைநழுவிச் சோப்பு/பேயோன்”

Comments are closed.