சினிமாவும் அரசியலும்/ராமகிருஷ்ணன் தியாகராஜன்

நேற்றைக்கு (ஏப்ரல் 28) பிரசிடென்ஸி கல்லூரியில் “சினிமாவும் அரசியலும” என்ற தலைப்பில் ஓர் உரை நிகழ்த்தினேன். அந்த உரையிலிருந்து:

சினிமாவிற்கும் அரசியலுக்கும், தமிழகத்தைப் பொறுத்தவரையில், நீண்ட காலத்திற்கு உறவு இருந்து வந்துள்ளது. பாரம்பரியமான உறவு என்று கூட கூறலாம்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சினிமா கைக்கூடும் என அறிந்த, அதற்கேற்றாப்போல், காய்களை நகர்த்தி, அதில் வெற்றி கண்ட முதல் அரசியல் கட்சி திமுக.

ஆனால், சினிமாப் புகழினால் மட்டுமே அரசியலில் ஒருவர் சிறந்து விளங்கமுடியாது. சினிமாப் புகழ் ஒருவருக்கு உதவலாம். ஆனால், அது மட்டுமே போதாது.

அப்படி இருந்தால், சிவாஜி கணேசன் 1989-ல் திருவையாறில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். அந்த சட்டமன்ற தேர்தலில், தமிழ் மற்றும் இந்தி திரைப்பட உலகத்தில் உச்சத்தில் இருந்த, 25 வயதே ஆகியிருந்த ஶ்ரீதேவி சிவகாசியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட தனது தந்தை ஐயப்பனுக்காக பிரசாரம் செய்தார். அங்கே வெற்றி பெற்றது திமுக-வின் வேட்பாளர்தான். கோவை தெற்கில் 2021-ல் தோற்ற கமலஹாசனிற்கும் அனுபவம் வேறுவிதமாக இருந்திருக்கும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை, 1990 மத்தியில் தவற விட்டுவிட்டார். ஆறுகளை இணைக்கவேண்டும் என்று காவிரிப் பிரச்சினை தீவிரமடைந்திருந்தபொழுது அக்டோபர் 2002-ல் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், வர முயன்றார். காலத்தின் சரியான பகுதியில் தான் இல்லை என்று உணர்ந்து விலகியும் விட்டார். அவர் அரசியலுக்கு வருவார் என்று மிகவும் பலமாக கூறப்பட்ட கடந்த இரண்டு மூன்று வருடங்களில் அவர் வரமாட்டார் என்ற நிலையை வெளிப்படையாக கூறியவன் நான் என்பதை இங்கே பதியவைக்கிறேன்.

சி என் அண்ணாதுரை, கலைஞர் மு கருணாநிதி, எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோரின் வெற்றிக்கு பின்னால் பல அரசியல் காரணிகள் உள்ளன. இவர்களை வைத்துக்கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடமுடியாது. எம் ஜி ஆரைப் போன்ற மிகவும் ஆழமாக திட்டமிட்டு செயல்படுகின்றவர்களை காண்பது அரிது. அவர் “ஹீரோ” பாத்திரத்தில் தோன்ற ஆரம்பித்த சமயத்தில் வெளியான படம்தான் “மர்மயோகி” (1951). மிகவும் அரசியல் கண்ணோட்டத்துடன் கொண்ட வசனத்துடன் அப்படம் துவங்குகிறது. அந்தப் படமே அவருக்காகத்தான் தயாரிக்கப்பட்டது போன்ற தோற்றம் உருவாகியது.

தமிழக அரசியல் பல புரியாப் புதிர்களைக் கொண்ட தளம். அதைப் புரிந்துகொள்வதற்கு வயது மற்றும் அனுபவம் மட்டும் போதாது. ஆழமான அறிவு மற்றும் படித்தலும் தேவை.

தமிழகம் மற்ற தென்னக மாநிலங்களிலிருந்து வித்தியாசமானது என்பதை முதலில் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும். ஆந்திரப்பிரதேசத்தில் ஒரு என் டி ஆர் தான் வரமுடிந்தது. சிரஞ்சீவி முயற்சித்தார். மிகுத்த பலனில்லை. இப்பொழுது, பவன் கல்யாண் முயற்சிக்கிறார். இதுவரையில் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. கர்நாடகாவில், ஒரு காலத்தில் ராஜ்குமார் அரசியலுக்கு வருவார், வருவார் என்று கூறப்பட்டது. ஆனால், கடைசியில் வரவில்லை. கேரளதைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால், தமிழக அரசியலில் சினிமா கலைஞர்களுக்கு இன்னமும் வாய்ப்பு உள்ளாதாக பலரும் கருதுகின்றனர்.

சினிமாவின் மீது அரசியல் தாக்கம் உள்ளதா அல்லது அரசியலின் மீது சினிமாவின் தாக்கம் உள்ளதா என்பதை ஆராய்ந்தால், இரண்டுமே தத்தமது தாக்கத்தின் மற்றதின் பேரில் செலுத்தியுள்ளன. செலுத்தி வருகின்றன. சினிமாப் புகழை அடித்தளமாகப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, திரைப்படங்களில் வருவதுப் போல, உடனடியாக நியாயம் வழங்குதல் மற்றும் நடவவடிக்கை எடுப்பது போன்ற நிகழ்வுகள் அரசியலில் ஆட்சி நிர்வாகத்தில் இருந்து வருகின்றன. திரைப்படங்களில் வருவதுப் போல, அசரவைக்கக்கூடிய பிரமிக்கத்தக்க சம்பவங்களும் ஆட்சியில் இருப்பவர்கள் செய்வது என்பது வாடிக்கையாகவே இருக்கிறது. ஜெயலலிதா அவர்கள் 2001-06 காலக்கட்டத்தில் நடைபெற்ற லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் மீது நடவடிக்கை மற்றும் ஜெயந்திரேர் கைது போன்றவற்றை சில உதாரணங்களாகக் கூறலாம். இலவசங்கள் வழங்குவதுக்கூட ஒரு விதத்தில் சினிமாவின் தாக்கமாகவே கருதலாம்.

தற்கால அரசியல் நிகழ்வுகளை (அ) வரலாற்றை பிரதிபலிக்கின்றவகையில் பலர் திரைப்படங்கள் எடுக்கின்றனர். உதாரணத்திற்கு, மணிரத்னம். கடந்த 35 வருடங்களாக, அவருடைய படங்களில் அரசியல் நிகழ்வுகள் மையமாகவோ அல்லது மிக முக்கியமானவையகவோ வந்துள்ளன. மெளன ராகத்திலிருந்து இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் ஆயுத எழுத்து போன்றவையை எடுத்துக்காட்டுகளாக கூறமுடியும். பா ரஜ்சித் திரைப்படங்களான ‘மெத்ராஸ்” மற்றும் “கபாலி” போன்றவற்றில் பட்டியிலனத்தவர்களின் பிரச்சினைகள் மையமாக கூறப்பட்டாலும் அரசியல் செய்திகள் இல்லாமல் இல்லை. “பரியேறும் பெருமாள்” (மாரி செல்வராஜ்) மற்றும் “ஜெய் பீம்” (டி. செ. ஞானவேல்) போன்றவையும் இந்த ரகத்தில் சேர்க்கலாம்.

சினிமாவைப் பயன்படுத்தி சிலர் அரசியலில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், சினிமாவில் அரசியல்வாதிகள் நையாண்டிசெய்யப்பட்டுள்ளனர். சோவின் வசனங்களில், 1970-களிலிருந்தே இந்தப் போக்கை காணலாம். அவரது முகமது பின் துக்ளக், இந்திய அரசியலில் மிக இக்கட்டமான சூழலில் வெளிவந்தப் படம்.

தற்பொழுது, விஜய் மற்றும் அஜீத் வருவார்களா என்ற கணிப்பும் நடந்து வருகிறது. சூர்யாவிற்கும் அரசியல் ஆசை இருக்கிறதாகவே நான் உணருகிறேன். ஆனால் அவர்கள் திரைப்படங்களை தங்களது அரசியல் நிலைப்ப்பாட்டிற்கு உபயோகிக்கவில்லை. இதுவே இவர்களுக்கும் எம் ஜி ஆருக்கும் இருக்கின்ற மிக முக்கியமான வித்தியாசம். இவர்களில் யாருக்காவது அரசியலில் வரவேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தார்களின்றால், அவர்கள் நீண்ட காலத்திற்கு காத்திருக்க முடியாது. காத்திருத்தல் கூடாது. ரஜினிகாந்தின் உதாரணத்தை யாரும் மறக்கக் கூடாது. ரஜினியே அந்த செய்தியை கொடுத்தும் விட்டார்.

(நன்றி: Chitra Raheem
இவர் இந்த நிகழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்)