இனிக்கும் தமிழ் – 121/   – டி வி ராதாகிருஷ்ணன்

ராவணனைக் கொன்றது ராமன் அல்ல என்கிறார் கம்பர்

இது என்ன புதுக்கதை…

உலகம் எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறது இராவணனை கொன்றது இராமன் என்று. மண்டோதரி சொல்கிறாள், இராமன் அல்ல இராவணனை கொன்றது, மாரன் (மன்மதன்) என்று. நாள் எல்லாம் அந்த மன்மதன் இராமன் மேல் மலர் கணை தொடுக்காமல் இருந்திருந்தால், இராவணன் சீதையின் மேல் இவ்வளவு காதல் கொண்டு இருக்க மாட்டான், அவனுக்கும் இந்த அழிவு வந்து இருக்காது என்கிறாள்.
மன்மதனின் கணையும், தேவர்களின் வரமும் இராவணனை கொன்றது என்கிறாள்.

செய்யுள்
——————
‘ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்; கண் புக்க வேழ வில்லால்,
நார நாள் மலர்க் கணையால், நாள் எல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வரத்தினாலே!

ஆர் அனார், = யார் அது
உலகு இயற்கை = இந்த உலகத்தின் இயற்கையை
அறிதக்கார்? = அறிய தக்கவர் (யாரும் இல்லை)
அவை ஏழும் ஏழும் அஞ்சும் = அந்த ஈரேழு உலகும் அஞ்சும்
வீரனார் = வீரனான இராவணன்
உடல் துறந்து, = உடலை துறந்து, விட்டு விட்டு
விண் புக்கார் = வானகம் போனான்
கண் புக்க = கணுக்கள் உள்ள
வேழ வில்லால், = கரும்பு வில்லால்
நார நாள் மலர்க் கணையால் = மணம் வீசும் மலர்க் கணையால்
நாள் எல்லாம் = எப்போதும்
தோள் எல்லாம் நைய = தோள் வலிக்க வலிக்க
எய்யும் மாரனார் = எய்யும் மன்மதன்
தனி இலக்கை = இராவணன் மார்பில் அம்பு எய்யும் தைரியம் மன்மதன் ஒருவனுக்கு
மட்டும் தான் இருந்தது.
மனித்தனார் அழித்தனரே, = அந்த மார்பை, அந்த இலக்கை மனிதன் அழித்து விட்டானே
வரத்தினாலே = வரத்தினாலே