இனிக்கும் தமிழ் – 122/டி வி ராதாகிருஷ்ணன்

விவேகசிந்தாமணி

மயக்க அணி:

ஒரு பொருளை மற்றொரு பொருளாக எண்ணி மயங்கிச் செயலாற்றுவதை புனைந்து கூறுவது மயக்க அணியாகும். விவேகசிந்தாமணியில் மகிழ்ச்சியூட்டும் மயக்க அணியை உடைய பாடல்கள் சில உள்ளன.

ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் ‘கெண்டைமீன்,கெண்டைமீன்’ என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.

தண்டுலாவிய
…..தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை
…..முகத்தருகு ஏந்தினாள்;
‘கெண்டை’ ‘கெண்டை’
…..எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள்
…..நின்று தயங்கினாள்.

மயக்க அணியை அற்புதமான பாடலால் புனைந்துரைக்கிறார் கவிஞர்.

-