கமலாம்பா

09/10/2021, சனிக்கிழமை 


பி.ஆர்.கிரிஜா.

நான் பி.ஆர்.கிரிஜா.

இன்று சீதா ரவி அவர்கள் எழுதிய கமலாம்பா… என்ற சிறுகதையைப் பற்றி நான் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். சீதா ரவி அவர்களைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இசைஞானம் மிகவும் அதிகம். மிகவும் ரசனையுடன் இசை சம்பந்தப்பட்ட கதைகளாகவே பெரும்பாலும் அவருடைய கதைகள் இருக்கும்.
  தீபாவளி மலர்களில் அவருடைய கதைகளை நான் படித்திருக்கிறேன். கதையின் நடையே ஸ்ருதி பிறழாத ஒரு கானமாகவே இருக்கும். அவ்வளவு ஆழ்ந்த ரசனையுடன் எழுதுவதில் கைதேர்ந்தவர்.
   இன்றைய கதையும் அப்படித்தான். ஒரு சிறு பெண் கமலாம்பா, திருவாரூரில் வசிப்பவர். அவருக்கு அவர் அண்ணா மற்றும் அவருடைய பாட்டி மட்டும்தான். அவர் அண்ணா எப்போது பார்த்தாலும் கமலாம்பா என்று கோபமாகவே கூப்பிடுவார். அவளுக்கு அவர் கோபத்துடன் கமலாம்பா என்று கூப்பிட்டால் மனது நடுங்கி அடிவயிறு கலங்கும். சில சமயங்களில் இவள் நினைப்பாள்  கோபத்துக்கென்றே ஏற்பட்ட பெயரோ  என்று. தன் கூட மூன்றாம் வகுப்பில் படிக்கும் வனிதாவையோ, ஷைலஜாவையோ, தேவியையோ சில சமயங்களில் கோபத்துடன் உச்சரித்துப் பார்த்தாள். ஏனோ கோபம் இந்தப் பெயர்களுடன் ஒட்டவில்லை. ஏன் இந்த பெயரை வைத்தார் என்று சண்டை பிடிக்க அம்மா இல்லை. போட்டோவில் சிரித்துக் கொண்டிருப்பவர், பதில் சொல்வாரா ? பாட்டியிடம் கேட்டிருக்கிறாள். “அம்பாள் பேருடீ பெண் குழந்தைக்கு இந்தாத்தில இந்தப் பேர்தான் வைப்பா !” பாட்டி சொன்னது நம்பிக்கை தரவில்லை. அதட்டுவதற்கு வசதியாகவே இருக்கட்டும் என்று வைத்ததுதான் கமலாம்பா.
   ஆனால் இன்று அண்ணா அதட்டவில்லை. மெட்ராசிலிருந்து வந்த ராமகிருஷ்ணன் நிச்சயம் பெரிய ஆளாக இருக்கவேண்டும். அண்ணாவுக்கு புடிச்ச கமல்ஹாசன், ரஜினி மாதிரி. பாட்டிதான் சொன்னா, ராமகிருஷ்ணன் மெட்ராஸில் பாட்டுக்கச்சேரி செய்பவர் என்று. கமலாம்பாள் கச்சேரிகள் கேட்டதில்லை. அண்ணா எப்போதாவது அவளை சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு போவார்.
    ராமகிருஷ்ணனைப் பார்த்தாள் கமலாம்பா. தன் அண்ணாவுக்கு அண்ணா மாதிரி இருந்தார். பௌர்ணமி சந்திரன் மாதிரி முகம், திராட்சைப் பழம் போன்ற கண்கள், நெற்றியில் விபூதி நடுவில் குங்குமம். மூவரும் கோவிலுக்கு சென்றார்கள். 
     ராமகிருஷ்ணன் “உன் பெயர் என்ன குழந்தை ?” என்று கேட்டார். கமலாம்பா,,,, என்றாள். ராமகிருஷ்ணன் “அடடா,,,, எத்தனை அழகான பெயர் !” என்றார். “தினமும் அம்பாள் பெயரைச் சொல்லனும்னுதான் உனக்கு இந்தப் பேரை வச்சிருக்கு !” என்றார். இல்லை…. இல்லை…..அதட்டிக் கூப்பிடத்தான் இந்த பேரை வெச்சுருக்கு என்று சொல்லிவிடலாமா ? என்று நினைத்தாள்.
    எல்லோரும் கமலாலயத்தை நெருங்கி படிகளில் இறங்கி உட்கார்ந்தார்கள். கமலாம்பா அவர் முகத்தையே பார்த்தாள். புதிதாக வைத்த ரோஜாச் செடியின்  முதல் பூவைப் பார்த்த பூரிப்பு. 
     கமலாலயம் சளக் புளக்கென்று அலை அடித்தது. ராமகிருஷ்ணன் தான் சொன்னார் இந்த கமலாலயம் எப்படி தாளம் தப்பாமல் அலை அடிக்கிறது என்று. அவளுக்கும் ஆச்சர்யம்.  அம்மன் சன்னதி சென்றனர். அம்மன் கமலாம்பாள் சிகப்புப் புடவையில் இருந்தாள். குருக்கள் ராமகிருஷ்ணனைப் பார்த்ததும் ராகம் போட்டு அர்ச்சனை செய்தார். ராமகிருஷ்ணன் கழுத்தில் ஒரு மாலை அணிவித்தார். கமலாம்பாளுக்கும் ஒரு பூ கிடைத்தது.  குருக்கள் “பாடுங்கோ !” என்றவுடன் ராமகிருஷ்ணன் கமலாம்பாம் ,,,பஜரே, மானஸ…… என்று பாட ஆரம்பித்தார். தீக்ஷிதர் கிருதி. கமலாம்பாளுக்கு உடல் முழுக்க ஒரு சிலிர்ப்பு. கண்களை மூடிக் கொண்டாள். கோவிலே அவர் பாட்டால் நிறைந்தது.
     பாட்டு முடிந்ததும் கமலாம்பாவின் பூச்சரம் அவள் கையிலிருந்து நழுவி விழுந்தது. அதை அவர் புன்னகையுடன் எடுத்து அவளிடம் கொடுத்தார். மனசெல்லாம் கமலாலயம் போல நிறைந்தது. சந்தோஷத்தில் சளக் புளக்கென்று அவள் மனது தளும்பியது, என்று முடிக்கிறார் கதையை சீதா ரவி அவர்கள்.
    முதல் முறையாக இந்தப் பெயர் தனக்கு அமைந்தது பெரும் பாக்கியம் என்று நினைத்தாள் கமலாம்பா. அதுவரை தன் மேலேயே ஒரு தாழ்வு மனப்பான்மை,  இந்தப் பெயர் முக்கியத்துவம் அற்றது என்று நினைத்தவள், அந்தக் கிருதியைக் கேட்ட பிறகு ஒரு நம்பிக்கை ஒரு சந்தோஷம் எல்லாம் அவளை ஆட்கொண்டது. அவளுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கதையே மொத்தத்தில் ஒரு சங்கீதம் போல மிக அழகாக ரசனையுடன் எழுதப்பட்டுள்ளது. நான் மிகவும் ரசித்துப் படித்தேன்.
நன்றி.
                   *