நகுலன் ஸ்ருதி கவிதைகள்

கனல்

தரையில்
தாராளமாகவே
சிதறிச் சென்ற
பிராந்திச் சுழிப்பில்
ஒரு தீக்குச்சியைக்
கிழித்துக் காட்ட
அதன் மீது
தன் ஒளி பரவ
ஓடிச் சலிக்கும்
வெள்ளை நீல
நீல வெள்ளை
ஜ்வாலைகள்
எவ்வளவு
அழகாக இருக்கின்றன
இங்குதான்
ருத்ரம்
வெகு நேர்த்தி
கொள்ளும் போலும்.

நகுலன் ஸ்ருதி கவிதைகள் 

பிராந்தி

ஒரு
மங்கலான சூழ்நிலை
புகை மண்டிய ஒரு பிரக்ஞை
அசேதனங்கள் மாத்திரம்
ஒரு அந்தியோக்கிய பாவம்
காட்டும் ஒரு நிலை
யாருமில்லாத பிரதேசத்தில்
நான் ஒரு நிழலாகத் திரிகிறேன்
இதிலிருந்து வெளிவராமல் இருக்க
இன்னும் ஆழ வேண்டும்
ஆழ்ந்து கொண்டேஎஎ
போனால்
ஆளே காணாமல்
போய்விடலாம்
என்றுதான் பேச்சு
பரவாயில்லை
என்றுமே
அதிகமாகப் பேசியதில்லை
வெளிமட்டத்தில்
மிதப்பதைவிட
அடிமட்டத்தில்
ஆழ்ந்து கிடப்பது …
அது
ஒரு தனி அனுபவம்.