இறங்க வேண்டிய ஸ்டாப்!/ஜெ.பாஸ்கரன்

‘முன்னால போ… வழில நிக்காதே’ கத்திக் கத்தி தொண்டை வறண்டதுதான் மிச்சம். ஆபீஸ் நேரத்தில் பஸ்ஸில் கூட்டம் அதிகம். டிக்கட் வாங்கியவர்கள் முன்னால் நகர்ந்து போகாமல், கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டிருப்பது கண்டக்டர் மோகனுக்கு எரிச்சலைத் தருவது.

‘ஏம்பா, கண்டாக்டரு…’ கூப்பிட்ட மூதாட்டியை முறைத்தான் மோகன்.

‘நான் கண்டாக்டரு இல்ல.. கண்டக்டரு’ என்றான்.

‘என்னாவோ ஒண்ணு… மூணு கடை சந்து இஸ்டாப்பு வந்தா சொல்லு’

‘சொல்றேன்…’ ; ‘டிக்கட் வாங்காதவங்க கேட்டு வாங்கிக்கங்க’

அடுத்த நிறுத்தத்தில் பாட்டி, ‘மூணு கடை சந்து இஸ்டாப்பா இது?’ கண்டக்டரைப் பார்த்துக் கூவியது.

‘ஆயா, இன்னும் அஞ்சாறு ஸ்டாப் இருக்குது. கம்முன்னு உட்காரு. வரும்போது சொல்றேன்’ – மோகன் மும்முரமாக ஸ்டேஜ் ஷீட் எழுதிக்கொண்டிருந்தான்.

இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு ஆயா கண்டக்டரைத் திரும்பிப் பார்த்தது – மோகன், முருகன் அருள்வதுபோல் கையைக் காட்டி, ‘சொல்கிறேன்’ என்றான்.

இன்னும் இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு பாட்டி, ‘மூணு கடை சந்து வந்துடிச்சா?’ என்றது.

மோகனுக்குக் கூட்ட நெரிசலில், பாட்டியின் தொணதொணப்பு எரிச்சலூட்டியது. ‘வந்தா சொல்றேன் ஆயா. சும்மா கூவிக்கினே இருக்காதெ’ என்றான்.

பாட்டி அமைதியானது. ஜன்னலுக்கு வெளியேயும், பஸ்ஸுக்கு உள்ளேயும் பார்த்தவாறு, பாட்டி டென்ஷனாக உட்கார்ந்து கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்திலிருந்து எப்படி வெளியே போவது என்ற கவலை பாட்டிக்கு!

இன்னும் இரண்டு நிறுத்தம் தாண்டிப் போனது பஸ்.

‘ஆயா, இதுதான் மூணு கடை சந்து ஸ்டாப்பு, எறங்கு’ மோகன் சொன்னவுடன் பாட்டி, ‘ஓ, ஸ்டாப்பு வந்திடுச்சா’ என்றது.

‘ஆமாம் இதுதான் சீக்கிரமா எறங்கு’

‘இங்க எப்படி எறங்க? என் மருமவ சொல்லிச்சே அங்கதான் எறங்குவேன்’

‘ஒன் மருமவ உன்னை எங்க எறங்க சொல்லிச்சு?’

‘மூணு கடை சந்து இஸ்டாப்புக்கு முன்னாடி வர்ர பாய்க் கடை இஸ்டாப்புல எறங்கணும்னு சொல்லிச்சு’

கண்டக்டர் ஆயாவை முறைத்தான் – ஆயா காரணம் புரியாமல் முழித்தது!

3 Comments on “இறங்க வேண்டிய ஸ்டாப்!/ஜெ.பாஸ்கரன்”

  1. இதில் யாரு யாரைக் காலய்க்கிறார்கள் ??

    கண்டக்டர் ஆயா வையா??

    அல்லது ஆயா கண்டக்டர் ரையா??

    அருமை அருமை

Comments are closed.