யோகியின் சன்னதித் தெரு இல்லம் ! /விசிறி சங்கர்

யோகி அறுபதுகள் துவங்கி எழுபதுகள் வரை புன்னைமரத்தடி, தேரடி மண்டபம், பாத்திரக்கடை திண்ணை, அருணாசலேஸ்வரர் ஆலயம்
என தம் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வந்தார்.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அவர்களுக்கு
காற்று மழை தூசு இடநெருக்கடி
எல்லாம் ஏற்படவே
யோகிக்கு
ஆஷ்ரமம் அமைத்திட
அன்பர்கள் வேண்டி நின்றனர்

பிச்சைக்காரருக்கு ஆஷ்ரமம்
தேவையில்லை என்றார் யோகி
யோகி இயற்கையின் மடியில்
இனிதே இருந்தார்

அன்பர்களின் தொடர்ந்த
வேண்டுகளுக்கு இணங்க
1976 ல் ஆஷ்ரமத்திற்குப் பதில்
அருணாசலேஸ்வரர் ஆலயம்
அருகில் வீடு ஒன்று பார்க்க
அனுமதியளித்தார்!

1976 ஜெயந்தி பாதபூஜை
காணிக்கை மற்றும்
அன்பர்கள் நன்கொடை
வீடு வாங்கும் பணிக்கு
யோகி அளித்தார்

மறைந்த மெய்யன்பர்கள்
திரு ராஜமாணிக்கம் நாடார்
திரு ராஜதுரை நாடார்
இருவரும் மீதி தொகையும்
செலுத்தி சன்னதித்தெரு
இல்லத்தை விலைக்கு வாங்கினர்

ஆயினும் யோகி உடனே அந்த
இல்லத்திற்கு இடம் பெயரவில்லை

அன்பர்கள் அந்த இல்லத்திற்கு
விமரிசையாக கிரகப்பிரவேசம்
நடத்திட எண்ணினர்

1977 பிப்ரவரி 6ம் தேதி திரு ஜனார்த்தனன், ஞானகணேசன்,
அ.ச.ஞானசம்பந்தன் குடும்பத்தினருடன்
சன்னதி தெரு இல்லத்தை திறந்து
யோகி சென்று அமர
அதுவே எளிய கிரகப்பிரவேசம் ஆனது…!

அந்நாள் தொட்டு 1993 வரை
சன்னதித் தெருஇல்லம்
எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்த
அரங்கமாகத் மாறியது!

பலரும் யோகியை முதன்முதல்
தரிசித்த நெஞ்சைவிட்டு நீங்கா
நினைவிடமாகியது!

2 Comments on “யோகியின் சன்னதித் தெரு இல்லம் ! /விசிறி சங்கர்”

  1. 1992 செப்டம்பர் வாக்கில் இந்த வீட்டிற்கு நானும் மகேஷூம் போயிருக்கிறோம்.
    மிகவும் அழுக்காக இருந்த திண்ணையில் நிறைய பக்தர்கள் திரண்டு இருந்தனர். நாங்கள் போன போது திண்ணையில் உட்கார இடமில்லாமல் ஆளோடியில் நின்று கொண்டு இருந்த நாலைந்து பேரோடு நாங்களும் நின்று கொண்டோம்.
    நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகி இருந்ததில் கால் கடுக்க ஆரம்பித்தது.
    உள்ளே ரேழியைத்தாண்டி முற்றத்தை எட்டிப் பார்த்தேன். ஒரே குப்பை. நிறைய மூட்டைகள்.
    நான் பார்ப்பதை உணர்ந்த ஒருவர் அவையெல்லாமும் கீழே கிடப்பதைத் திரட்டி கட்டி வைத்திருப்பது தான் என்றார்.
    யோகியிடம் அன்பாகக் கொடுக்கப்படும் வாழைப்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் கூட, வாசல் குறட்டில் இருந்து அமர்ந்த வாக்கில் உள்ளே விட்டெறிவார் என்று கூறினார் அவர். ஆனால் ஆச்சரியமாக அவற்றில் இருந்து யாதொரு மணமும் வருவதில்லை என்று கூறினார்.

    சற்று நேரத்தில் யோகி வந்தார். திருமணமாகாத
    அந்நாட்களில் நானும் மகேஷூம் விடுமுறை நாட்களில் தெருத்தெருவாக சமாதிகளையும் குகைகளையும் தேடித்தேடி அலைவது என்று வைத்துக் கொண்டு இருந்தோம்.
    பெரும்பாலும் திருவண்ணாமலை, ரமணாஸ்ரமம், சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம், மேலே ஸ்கந்தாஸ்ரமம், விருபாக்ஷி குகை என்று அடிக்கடி போவது. இதைத்தவிர அதிக அளவில் அரவிந்தாஸ்ரமம்.
    யோகியைப் பற்றி யாரோ எப்பவோ சொல்லிக் கொண்டு இருப்பது காதில் விழுகிறதுதான். ஆனால் அவரைப் பார்க்க முயன்றது இல்லை.
    அந்த முறை மகேஷின் ஒன்று விட்ட தமக்கை வீட்டிற்குப் போனபோது தான் அதே தெருவில் தான் யோகி இருக்கிறார் என்று தெரிந்தது.

    கொஞ்ச நேரத்தில் யோகி வந்து, அவரது யதாஸ்தானமான, ரேழிக்கதவைத் தாண்டி, இரண்டு திண்ணைகளுக்கு இடைப்பட்ட குறட்டில் சகஜமாக அமர்ந்து கொண்டார்.

    சொல்ல முடியாத‌ ஒரு இன்ப உணர்ச்சி அடிவயிற்றில் தோன்றியது.

    ஒவ்வொருவராக அவரருகில் கிரமப் பிரகாரம் சென்று ஆசீர்வாதம் பெற்றனர். எல்லோரிடமும் அழகான ஆங்கிலத்தில் பேசினார். பெரும்பாலானோர் தமிழில் ஏதோ கேட்டனர். அவர் புரிந்து கொண்டாற்போல் தான் இருந்தது. அடர்ந்த தாடிக்குள் ஒரு அபூர்வமான புன்னகை தொடர்ச்சியாக நீண்டு இருந்தது.
    மகேஷ் ஒன்றும் கேட்கவில்லை. என் முறை வந்தது.

    எனக்கு அவரை எவ்வாறு வணங்குவது என்று தெரியவில்லை.‌ நெடுஞ்சாண் கிடையாக விழவேண்டுமா என்று தெரியவில்லை. நான் விழவும் இல்லை.
    அவர் அருகே சென்று குனிந்து, வணக்கம் தெரிவித்தேன்.
    What do you want my child”
    அழகான வசீகரமான கரகரப்பான குரல்.
    எனக்கு அவரிடம் என்ன‌ வேண்டுவது என்று தெரியவில்லை. மகேஷைப் போல் திடமாக வணங்கி விட்டு வரத் தெரியவில்லை எனக்கு.‌ அந்தக் காலகட்டத்தில் என் தாயார் பார்க்கின்சன்‌ என்ற கொடிய‌ நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதைப்பற்றிக் கேட்கலாம் என்று அவரிடம் தெரிவித்தேன்.
    அவர் முறுவலித்து, He will take care என்று கூறியவாறு, என்னைக் கீழே இழுத்து, பலமாக நாலைந்து முறை முதுகில் தட்டிக் கொடுத்தார்.
    பிறகு, தன் கைநிறைய கருங்கல் ஜல்லி போல இருந்த கல்கண்டுக் கட்டிகளை எடுத்து என் இரு கைநிறைய‌ அளித்து விடை கொடுத்தார்.

    நீண்ட பிரமிப்பில் இருந்த நான் மீண்ட போது பஸ் ஸ்டாண்டு வந்து இருந்தோம்.

    நான் இரண்டு கைகளிலும் கற்கண்டுகளை ஏந்தியவாறே வந்திருக்கிறேன். மகேஷ் என் பைகளை சுமந்து வந்திருக்கிறான்.
    எனக்குக் கொஞ்சம் வெட்கமாகப் போய்விட்டது.

    அவரைக் குறி சொல்பவரைப் போல் பாவித்து நமது உபத்திரவங்களைச் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றியது.

    அதற்கப்புறம் அநேகந்தரம் திருவண்ணாமலை போயிருந்தாலும் யோகியைப் பார்க்க முயலவில்லை.

    அவர் ரமணாசிரமத்திற்கு எதிர்ப்பட்ட சந்தில் குடிபெயர்ந்து இருந்தார். அதற்கப்புறம் அவரது சமாதி ஆகிவிட்டது.

    பலவருடங்கள் பின்னர் ஓரிரு முறை அவரது அதிஷ்டானத்திற்கு சென்றதோடு சரி.

Comments are closed.